சிலம்பாட்டம்! தீப்பந்தம்! கோலாட்டம்! மகன் திருமணத்தில் அதிமுக எம்எல்ஏ காட்டிய செம கெத்து!

சென்னை போரூரை அடுத்து மதனந்தபுரத்தில் மணமகன் வரவேற்பு நிகழ்ச்சியில் சிலம்பம், தீச்சிலம்பம் சுற்றிய எம்எல்ஏ அசத்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சட்ட மன்ற தொகுதியில் இருந்து தேர்ந்ததெடுக்கப்பட்டவர் அதிமுக எம்எல்ஏ பழனி. இவரது மகன் திருமணம் சென்னை போரூரை அடுத்த மதனந்தபுரத்தில் ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. முன்னதாக மணமகன் ஊர்வலம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பொதுவாக திருமணங்களில் பாட்டுக் கச்சேரி, நடனம், நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். ஆனால் புது முயற்சியாக எம்எல்ஏ பழனியின் மகன் திருமண நிகழ்ச்சியில் தமிழர் பாராம்பரியமான நாட்டுப்புறக் கலைகளுக்கு புத்துயிர் அளிக்கும் விதமாக சிலம்பாட்டம், புலியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மணமகன் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தபோது திடீரென எம்எல்ஏ பழனி சிலம்பம் சுற்றத் தொடங்கினார். அதை பார்த்த திருமண வீட்டார், பொதுமக்கள், கட்சியினர் ஆச்சரியத்தில் மகிழ்ச்சியுடன் பார்த்தனர். சுமார் 5 நிமிடங்கள் வரை சிலம்பம் சுற்றிய எம்எல்ஏ அடுத்து தீச்சிலம்பு சுற்றத் தொடங்கியது மேலும் அங்கிருந்தவர்களுக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தியது.

எம்எல்ஏவின் நாட்டுப்புற கலை நிகழ்வுகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பள்ளியில் வாத்தியார் இல்லாதபோது மாணவர்கள் செய்யும் சேஷ்டைகள் நடப்பது வழக்கம். வாத்தியார்தான் லண்டனில் இருக்கிறாரே அப்புறம் என்ன ஒரே குத்தாட்டம்தான்.