+2க்குப் பிறகு பணத்துக்காக படிக்கலாமா? - ஞானகுரு

+2 தேர்வு முடிவுகள் வெளியாகி மதிப்பெண்கள் வந்துவிட்டன. நல்ல மதிப்பெண் வாங்கியவர்கள், குறைவான மதிப்பெண் எடுத்தவர்கள் என்று எல்லோருமே அடுத்து என்ன என்று தேடுதல் வேட்டையில் இறங்கியிருக்கிறார்கள். ஏற்கெனவே இந்த படிப்பு தான் படிக்கப் போகிறேன் என்று உறுதி எடுத்து அதற்கேற்ப மதிப்பெண் பெற்றவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை, மற்றவர்கள் என்ன கோர்ஸ் எடுப்பது.


+2 தேர்வு முடிவுகள் வெளியாகி மதிப்பெண்கள் வந்துவிட்டன. நல்ல மதிப்பெண் வாங்கியவர்கள், குறைவான மதிப்பெண் எடுத்தவர்கள் என்று எல்லோருமே அடுத்து என்ன என்று தேடுதல் வேட்டையில் இறங்கியிருக்கிறார்கள்.

ஏற்கெனவே இந்த படிப்பு தான் படிக்கப் போகிறேன் என்று உறுதி எடுத்து அதற்கேற்ப மதிப்பெண் பெற்றவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை, மற்றவர்கள் என்ன கோர்ஸ் எடுப்பது என்று தெரியாமல் விழிக்கிறார்கள்.

ஞானகுருவிடம் பேசினோம். ‘’படித்து முடித்ததும் வேலைக்குப் போக வேண்டும் நல்ல சம்பளம் வேண்டும், என்று நினைப்பவர்களுக்கு இப்போதும் பி.இ., பி.டெக் போன்ற படிப்புகளே முதல் இடத்தில் இருக்கின்றன.

நிறைய மதிப்பெண்ணும் பணம் லேட்டாக கிடைக்கும் என்றாலும் பொறுமையுடன் இருக்க முடியும் என்று நினைப்பவர்கள் மட்டும் மருத்துவம் போகலாம். அதாவது எம்.பி.பி.எஸ். கிடைக்கவில்லை என்பதற்காக ஆயுஷ் மருத்துவம் படிப்பது வீண். சித்தா, ஹோமியோ போன்ற படிப்புகள் முடித்தாலும் இப்போதும் போதிய அங்கீகாரமும் கிடையாது, பணமும் கிடைக்காது. இதனை சேவையாக நினைத்து செய்யும் மனப்பான்மை இருந்தால் மட்டுமே ஆயுஷ் படிப்புகளில் இறங்கலாம்.

ஒரு காலத்தில் அக்ரிகல்ச்சர் படித்தால் எளிதாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிப்புகளை கிளியர் செய்ய முடியும் என்று சொல்வதுண்டு. இப்போது அவையெல்லாம் உண்மை இல்லை. ஆகவே, தேவையில்லாமல் அந்த வலையில் சிக்கிக்கொள்ள வேண்டாம்.

ஏதேனும் வேலை போதும் என்று நினைப்பவர்களுக்கு எக்கச்சக்க வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. மருத்துவம், பொறியியல் தவிர்த்து 250க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய துறைகள் உண்டு.

இன்னமும் ஆசிரியர் துறைக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. முதுகலை முடித்துவிட்டு பி.எட் படித்தால் போதும். பிஹெச்.டி முடித்தால் பேராசிரியராகவே ஆகலாம். ஆசிரியர் தேர்வுகள் முறைப்படுத்தப்பட்டு விட்டன. நல்ல ஆசிரியர்களுக்குத் தேவை எக்காலமும் இருக்கிறது.

பிசியோதெரபி,. நர்சிங், பார்மஸி படிக்கலாம். இவற்றுக்கெல்லாம் வெளிநாடுகளில் நல்ல மதிப்பும் தேவையும் இருக்கிறது. விலங்கியல் சார்ந்த மருத்துவப் படிப்புகளும் இருக்கின்றன. கால்நடை மருத்துவம், மீன்வளப் படிப்புக்கெல்லாம் கூட நிறைய வேலைகள் காத்திருக்கின்றன. நியூட்ரிஷன் அண்டு டயடிக்ஸ் முடித்தால், மருத்துவருக்கு இணையாக அமர்ந்து ஆலோசனை வழங்கலாம்.

பாலிடெக்னிக்கில் வேலைவாய்ப்புள்ள ஏதாவது ஒரு டிப்ளமோவை குறைந்த செலவில் முடித்துவிட்டு, ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து சம்பாதித்துக்கொண்டே பகுதி நேரத்தில் 3 வருடத்தில் பி.இ முடித்துவிடலாம். இப்படி முடிப்பவர்களுக்கு பிராக்டிகல் நாலட்ஜ் அதிகம் இருக்கும் என்பதால் வேலைவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

இன்னொரு சாய்ஸும் இருக்கிறது. அது, AMIE (Associate Member of the Institution of Engineers). பொறியியலுக்கான தொலைதூரக் கல்வி. வேலை செய்தபடியே படிக்கலாம். ஏரோஸ்பேஸ் எஞ்சினியரிங் முதல் ஆர்க்கிடெக்சர் வரை எதையும் இதில் படிக்க முடியும். அனைத்தும் பி.இக்கு இணையானவை.

இன்றைக்கு பெரிய பெரிய சாஃப்ட்வேர் நிறுவனங்கள் பி.இ படித்தவர்களை விட பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்.சி.ஏ, பாலிடெக்னிக் மாணவர்களையே விரும்புகின்றன. பி.காம், பி.பி.ஏ படிப்புகளிலும் நிறைய நவீனங்கள் வந்துவிட்டன. ஏதாவது ஒரு டிகிரி முடித்துவிட்டு, டி.என்.பி.எஸ்.சி, யூ.பி.எஸ்.சி, ஐ.பி.பி.எஸ், ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன், ஆர்.ஆர்.பி தேர்வுகளை எழுதி, தேர்ச்சி பெற்று உச்சத்தில் அமரலாம். யூ.பி.எஸ்.சியில் மட்டும் 28க்கும் மேற்பட்ட துறைகள் உண்டு. பி.எஸ்சி புள்ளியியல் முடித்து, எம்.எஸ்சி முடித்து ஐ.எஸ்.எஸ் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் கலெக்டர் ரேங்க்கில் அதிகாரி ஆகலாம்.

நம்மூரில் விளையாட்டுப் பல்கலைக்கழகம் இருப்பது பலருக்குத் தெரியாது. ஏகப்பட்ட கோர்ஸ்கள் உள்ளன. ஸ்போர்ட்ஸ் மெக்கானிக் என்றொரு படிப்பு கூட இருக்கிறது. விளையாட்டு ஆர்வலர்கள் அந்தப் பல்கலைக்கழகத்தைத் தேடலாம். ஓவியம் வரைவதில், சிற்பம் வடிப்பதில் ஆர்வமா... கும்பகோணம், சென்னை, மாமல்லபுரத்தில் கவின்கலைக் கல்லூரிகள் உள்ளன. போட்டிகள் குறைவு. நிறைவான திறமையோடு வெளியில் வரலாம். இசையில் ஆர்வமுள்ளவர்கள் அரசு இசைக்கல்லூரிகளில் இணையலாம்.

மீடியா துறையில் சாதிக்கலாம். போட்டோகிராபி, வீடியோ எடிட்டிங், சவுண்ட் எஞ்சினியரிங், ஜர்னலிசம், மாஸ் கம்யூனிகேஷன், விஷுவல் கம்யூனிகேஷன், வெப் டிசைனிங் படிக்கலாம். அனிமேஷனுக்கு மிகச்சிறப்பான வாய்ப்புகள் இருக்கின்றன.

சட்டம் படிக்கலாம். இப்போது சாஃப்ட்வேர் கம்பெனிகளில் கூட சட்ட ஆலோசகர்கள் நியமிக்கப்படுகிறார்கள். மருத்துவத்தைப் போல, சட்டத்திலும் பல சிறப்புப் பிரிவுகள் வந்துவிட்டன. கடல்சார் பல்கலைக்கழகம். ஷிப்பிங் மேனேஜ்மென்ட், ஷிப்பிங் பைனான்ஸ், ஷிப்பிங் டெக்னாலஜி என ஏகப்பட்ட டிகிரி, டிப்ளமோ படிப்புகள் இருக்கின்றன. அவற்றை தேர்வுசெய்து கடலுக்குள்ளாகவே வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம். இத்துறையில் உடனடி வேலைவாய்ப்பு, கணிசமான சம்பளம் கிடைக்க வாய்ப்புண்டு.

ஆசைப்பட்டு படிப்பது வெற்றி தரும். அதுபோல் கிடைப்பதை படிப்பதும் வெற்றி தரும். என்ன படிப்பது என்றாலும் அதனை ஆர்வத்துடனும் அக்கறையுடனும் படித்தால் எல்லா துறையிலும் பணமும் அங்கீகாரமும் கொட்டிக்கிடக்கின்றன. எனவே, மதிப்பெண் பற்றி கவலை வேண்டாம்’’ என்றார் ஞானகுரு.