எச்சில் இலையில் உருளும் மூட நம்பிக்கைக்கு எதிராக போர்க்கொடி

எச்சில் இலையில் உருளும் மூடநம்பிக்கை பழக்கத்திற்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்திருப்பது தமிழகத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.


எச்சில் இலையில் உருளும் மூடநம்பிக்கை பழக்கத்திற்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்திருப்பது தமிழகத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

கரூர் மாவட்டத்தில் உள்ள நெரூர் கிராமத்தில் சதாசிவ பிரம்மேந்திரரின் சமாதி உள்ளது. (கோவிலாக மாற்றியுள்ளனர்) சதாசிவர் நினைவு நாளில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் ஒன்றுதான் எச்சில் இலையில் உருளும் சம்பிரதாயம்.

பார்ப்பன இந்துக்கள் சாப்பிட்டு போட்ட இலையில், தாழ்த்தப்பட்ட மற்றும் ஓபிசி இந்துக்களை உருள வைப்பதே இச்சடங்கு. ஆன்மீகத்தின் பெயரால் மனித நேயத்துக்கு எதிரான இந்த மூடநம்பிக்கை சடங்கை கடந்த 2015 ஆம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்றம் தடை போட்டது.

தற்போது அதே சடங்கை மீண்டும் நடத்திக் கொள்ள மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவின் படி மே 18ஆம் தேதி எச்சில் இலை சடங்கு நடந்து முடிந்திருக்கிறது. அதாவது, நவீன் குமார் எனும் இந்து முன்னணியை சார்ந்த ஒருவரை பக்தர் எனும் பெயரில் வழக்கு போட வைத்து இந்த தீர்ப்பை பெற்றுள்ளனர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு குற்றம் சாட்டியிருக்கிறார்.

மூடநம்பிக்கைகளை வைத்துத்தான் பார்ப்பனர்கள் பன்னெடுங்காலமாக தங்கள் ஆன்மீக, சமூக மேலாண்மையை நிலைநாட்டிக் கொள்கின்றனர். பார்ப்பனர்கள் மேன்மையானவர்கள் புனிதர்கள், அவர்கள் சாப்பிட்ட எச்சில் நிலையில் உருண்டால் மோட்சம் கிடைக்கும் என்று நம்ப வைக்கும் தந்திரமே நெரூர் சடங்கு.

இச்சடங்கை நடத்த உத்தரவிட்ட நீதிபதியோ அல்லது பார்ப்பனர்களோ எச்சில் இலையில் உருளுவார்களா? அப்படி யாரும் செய்ய மாட்டார்கள். ஆனால், தலித் மற்றும் ஓபிசி இந்துக்கள் மட்டும் எச்சில் இலையில் உருள நீதிமன்றமே அனுமதிப்பது சட்டத்துக்கும் மனித நேயத்துக்கும் எதிரானதாகும்.

ஆகவே, இந்த பார்ப்பனிய மூட நம்பிக்கைகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும். அல்லது கோவில்களில் இது போன்ற சமூக விரோத செயலுக்கு தடை விதத்து அரசாணை பிறப்பிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.