அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டது. அதுபோல் தி.மு.க.வில் எந்த பெரிய கட்சியின் கூட்டணியும் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.
இரண்டு தொகுதிகளும் வேண்டாம்... தி.மு.க.வுக்கு எதிராக மனிதநேய மக்கள் கட்சியில் கொதிப்பு
இந்த நிலையில், திமுக கூட்டணியில் உள்ள மனித நேய மக்கள் கட்சிக்கு நேற்று 2 தொகுதிகள் ஒதுக்ககப்பட்டு உடன்படிக்கையில் மமக தலைவர் ஜவாஹிருல்லா கையெழுத்திட்டார். இந்த 2 தொகுதி ஒப்பந்தத்திற்கு உறுப்பினர்கள் கடுமையான வருத்தமும், அதிருப்தி குரலையும் எழுப்பி வருகின்றனர்.
இந்த 2 தொகுதிகளையும் அவர்களுக்கே கொடுத்து விட்டு தேர்தலை கௌரவமாக புறக்கணித்து இருந்தால்? தொண்டர்களின் உழைப்பாவது மிஞ்சியிருக்கும். எத்தனை எத்தனை போராட்டங்கள், மாநாடுகள், உடல் உழைப்பு, கைசெலவு செய்த, சாதாரண தொண்டனின் மனம் ஏற்க மறுக்கிறது. இதயத்தில் குடியிருந்தே அடிமையாகி போனவர்கள்? என்று தலைநிமிர்வோமோ!.. என ஹாஜா முபாரக் என்பவர் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பொருளாதாரத்திலும், உடல் உழைப்பாலும் பல்வேறு போராட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் கூட்டணி கட்சி என்ற பெயரில் முழு ஆதரவு அளித்தோம். நமக்கான முழு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதில் நமக்கு கிடைத்த பாடம். பலநாள் கொள்கை கூட்டணியை விட சந்தர்ப்பவாத தேர்தல் கூட்டணிக்கு வலிமை அதிகம்.. நமக்கு கொடுத்த இரண்டு இடத்தில் நாம் நூற்றுக்கு ஐநூறு சதவீத உழைப்பை செலுத்தி வெற்றி பெறுவோம் இன்ஷா அல்லாஹ் என முகமது சமீர் என்பவர் பதிவிட்டுள்ளார்.
இப்படி மமகவினர் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமுமுக தலைவராக இருந்த ஹைதர் அலி இன்று சசிகலாவை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன்பிறகு தினகரனையும் சந்திக்க உள்ளதாகவும் தெரிகிறது. ஆகவே, என்ன நடக்கும் என்று புரியாமல் தவிக்கிறது தி.மு.க. தலைமை.