அப்பான்னா பலாப்பழம், இடி தாங்கி

தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்


தாய்க்கு மதிப்பு கொடுக்கப்படும் மதிப்பில் கொஞ்சமும் தந்தைக்கு வழங்கப்படுவதில்லை. காலம் முழுக்க கஷ்டப்படுவது மட்டுமே அவரது வேலையாக இருக்கிறது. இந்த நிலையில் தந்தையர் தினத்துக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸும், அவரது மகன் அன்புமணியும் வாழ்த்து சொல்லியிருக்கிறார்கள்.

ராமதாஸ் அவரது பதிவில், ‘’உலகில் புரிந்து கொள்ளப்படாத உன்னத உறவு தந்தை. உள்ளுக்குள் இனிப்பான சுளைகளைக் கொண்டிருந்தாலும் வெளியில் தெரியும் முட்களைப் போன்ற தோல்களாகவே பார்க்கப்படும் பலாப்பழங்கள் தான் தந்தையர்கள். குழந்தைகளுக்காக தாய் உணவை தியாகம் செய்தால், வாழ்வின் அனைத்து சுகங்களையும் தியாகம் செய்பவர்கள் தந்தையர்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் பெண் இருப்பதைப் போல ஒவ்வொரு பிள்ளையின் வெற்றிக்கு பின்னாலும் இருப்பவர்கள் தந்தைகள். அந்த ஆண் தேவதைகளை இந்த நாளில் மட்டுமின்றி, எல்லா நாளிலும் போற்றுவோம்..’’ என்று கூறியிருக்கிறார்.

அதேபோல் அன்புமணி, ‘’உலகில் சுமை தாங்கிகள், இடி தாங்கிகள், தடை தாங்கிகள் என பல உண்டு. இவை அனைத்தின் நோக்கமும் என்னவென்றால் மனிதர்களைக் காப்பதும், அவர்களின் சுமைகளைக் குறைப்பதும் தான். இவை அனைத்தின் பணிகளையும் ஒன்றாகச் செய்யும் ஓர் உன்னத படைப்பு தான் தந்தையர்கள். அன்னையரின் தியாகம் குன்றின் மேலிட்ட விளக்காக அனைவருக்கும் தெரியும் என்றால், தந்தையரின் தியாகம் குடத்தின் உள்வைத்த விளக்காக எவருக்கும் தெரியாது.

ஆம்.... வெளியில் தெரியாமல் அன்பு காட்டுவதிலும், தியாகம் செய்வதிலும், பிள்ளைகளை கடிந்து கொண்டதற்காக தங்களைத் தாங்களே வருத்திக் கொள்வதிலும் தந்தையர்கள் தாய்க்கும் தாய்கள். அந்த மகாத்மாக்களை உலக தந்தையர் நாளான இன்று போற்றுவோம்,..’’ என்று கூறியிருக்கிறார்.

அப்பாவை பாடுவோம்.