எமலோகத்தை பொறுத்தவரை அவரவரின் பாவத்திற்கேற்ப தண்டிப்பதற்காக மொத்தம் எண்பத்து நான்கு லட்சம் நகரங்கள் இருக்கின்றன. அதில் மிக மிக கொடிய தண்டனைகள் கொடுப்பதற்காக 28 நகரங்கள் இருக்கின்றன. அவற்றை பற்றி இப்போது பார்ப்போம்.
மனைவியை கொடுமைப்படுத்தும் கணவன் எந்த நரகத்துக்குப் போவான்? இதோ 28 நரகங்களுக்குச் செல்பவர்களின் பாவப் பட்டியல்!
தாமிஸ்ரம்: பிறருக்கு சொந்தமான பொருளை அகபரிப்பது குற்றமாகும். பிறருக்கு சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புவதும், அபகரிப்பதும் பாவச்செயலாகும். அதே போல பிறரது குழந்தையை அபகரிப்பது மகாப்பாவமாகும். பிறரது பொருளை ஏமாற்றி அபகரிப்பது, நமக்கு தீராத துன்பத்தை தரும். இதற்கு தண்டனையாக, நரகத்தில் எமகிங்கரர்கள் முள்ளாலான கட்டைகளாலும், கதைகளாலும் நைய புடைப்பார்கள்.
அந்ததாமிஸ்ரம்: கணவனும் மனைவியும் சேர்ந்து மனமொத்து வாழ்வது அவசியம். அதை விடுத்து ஒருவரையொருவர் ஏமாற்றுதல் தவறாகும். கணவன் மனைவியை வஞ்சித்தலும், மனைவி கணவனை வஞ்சித்தலும் பாவச்செயலாகும். இத்தகையவர்கள் இந்நரகத்தில் உழன்று, கண்கள் தெரியாத நிலையில் இருள் சூழ மூர்ச்சையாகி விழுந்து தவிக்க வேண்டியது வரும்.
ரௌரவம்: பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும் குடும்பத்தை பிரிப்பது, அழிப்பது, அவர்களின் பொருள்களை பறிப்பது என்பது குற்றமாகும். இதற்கு தண்டனையாக, ஜீவன்களை எமகிங்கரர்கள் சூலத்தில் குத்தி துன்புறுத்துவார்கள்.
மகாரௌரவம்: மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தை வதைத்தவர்கள், பொருளுக்காக குடும்பங்களை நாசம் செய்தவர்கள் அடையும் நரகம் மகா ரௌரவம் ஆகும். இங்கு குரு என்று சொல்லக்கூடிய, பார்ப்பதற்கு கோரமான மிருகம் காணப்படும். இவை பாவிகளை சூழ்ந்து முட்டி மோதி பலவகையில் துன்புறுத்தும்.
கும்பிபாகம்: சுவையான உணவுக்காக, வாயில்லா உயிர்களை வதைத்தும், கொன்றும் பலவிதங்களில் கொடுமைபடுத்தும் பாவிகள் அடையும் நரகமிது. எரியும் அடுப்பில் வைக்கப்பட்டிருக்கும் எண்ணெய் கொப்பறையில் போட்டு, எமதூதர்கள் பாவிகளை துன்புறுத்துவார்கள்.
காலசூத்திரம்: பெரியோர்களையும், பெற்றோர்களையும் அடித்து அவமதித்தும், துன்புறுத்தியும், பட்டினி பொட்டும் வதைத்து உதாசீனம் செய்த பாவிகள் செல்லும் நரகம் இதுவாகும். இங்கு அதே முறையில் அடி, உதை, பட்டினி என்று அவர்கள் வதைக்கப்படுவது உறுதி.
அசிபத்திரம்: தெய்வ நிந்தனை செய்தவர்களும், தர்மநெறியை விட்டு, அதர்ம நெறியைப் பின்பற்றியவர்களும் அடையும் நரகம் இது. இங்கு பாவிகள் பூதங்களால் துன்புறுத்தப்பட்டு அவதிபடுவார்கள். இனம் புரியாத பயம் உண்டாகும்.
பன்றி முகம் குற்றமற்றவரை தண்டிப்பது கொடுமையாகும். நீதிக்கு புறம்பாக அநீதிக்கு துணைபோவதும் அதர்மமாகும். இந்நரகத்தில், பன்றிமுகத்துடனும் கூர்மையான பற்களுடனும் ஒரு வகை மிருகம் காணப்படும். அதன் வாயில் அகப்பட்டு, கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு பாவிகள் அவதி படுவார்கள்.
அந்தகூபம்: உயிர்களை சித்ரவதை செய்தல், கொடுமையாக கொலை செய்தல் ஆகிய குற்றங்கள் புரிந்த பாவிகள் அடையும் நரகமிது. கொடிய மிருகங்கள் கடித்து குதறும் நிலை ஏற்படும். வித்திரமான மாடுகள் கீழே போட்டு மிதித்து துன்புறுத்தும்.
அக்னி குண்டம்: பிறருக்கு உரிமையான பொருள்களை, தனது வலிமையாலும் செல்வாக்காலும் அபகரித்து வாழ்ந்த பாவிகள், பலாத்காரமாக தனது கார்யங்களை நிறைவேற்றிக் கொள்பவர்கள் இந்த நரகத்தை அடைவார்கள். இங்கு பாவிகள் ஒரு நீண்ட தடியில் மிருகத்தைப்போல் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் எரியும் அக்னி குண்டத்தில் வாட்டி எடுக்கப்படுவார்கள்.
வஜ்ர கண்டகம்: சேரக்கூடாத ஆணையோ, பெண்ணையோ கூடித்தழுவி மகிழும் காமவெறியர்கள் அடையும் நரகம் வஜ்ர கண்டகம். நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளை கட்டித்தழுவ ஜீவன்கள் நிர்பந்திக்கப்படுவார்கள். இதனால் உடல் எரிந்து துன்பப்படுவார்கள்.
கிருமிபோஜனம்: தான் மட்டும் உண்டு, பிறரது உழைப்பைச் சுரண்டிப் பிழைத்த பாவிகள் இங்கு தான் வரவேண்டும். பிறவற்றை துளைத்து செல்லும் இயல்புடையது கிருமிகள். இந்த நரகத்தில், பாவிகளை பலவிதமான கிருமிகள் கடித்து துளையிட்டு துன்புறுத்தும்.
சான்மலி: நன்மை, தீமை, பாபம் ஆகியவற்றை பாராமல், உறவுமுறையை கூட பாராமல் யாருடனாவது எப்படியாவது கூடி மகிழும் காமுகர்கள் அடையும் நரகம் இது. இங்கு இத்தகைய பாவிகளை முள்ளாலான தடிகளாலும், முட்செடிகளாலும் எம கிங்கரர்கள் துன்புறுத்துவார்கள்.
வைதரணி: அதிகாரபலத்தாலும், கபட நாடகத்தாலும், நயவஞ்சகத்தாலும் நல்வழிகளில் செல்லாமல் தர்மத்துக்கு புறம்பாக நடந்தவர்கள் அடையும் நரகமிது. வைதரணி என்பது நதியல்ல, இந்த ஆற்றில் தண்ணீருக்கு பதிலாக ரத்தமும், சீழும், சிறுநீரும், மலமும் கலந்த கலவையே ஆறாக ஓடும். இந்த நதியில் கொடிய பிராணிகளும் வாசஞ்செய்யும். பாவிகள் இந்நதியை கடக்க முடியாமல், இதில் வீழ்ந்து துன்பப்படுவார்கள்.
பூயோகம்: சிறிதும் வெட்கம் இன்றி இழிவான பெண்களுடன் கூடி, ஒழுக்கக்குறைவாக நடந்து, வாழ்க்கையில் எந்த லட்சியமும் இல்லாமல் மிருகம் போல் வாழ்ந்தவன் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனை, விஷமுடைய பூச்சிகளும், பிராணிகளும் கடிக்கும்.
பிரயணயோகம்: பிராணிகளை கொடுமைப்படுத்தி கொலை செய்யும் கொடுமைக்காரர்கள் அடையும் நரகம் இது. இங்கு கூர்மையான பாணங்களை ஜீவன்களின் மீது எய்தி துன்புறுத்துவார்கள்.
விசஸவம்: பசுவில் எல்லாதேவதைகளும் இருக்கிறார்கள். அந்தப்பசுக்களை கொடுமை செய்பவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனுக்கு எமகிங்கரர்கள் சவுக்கடி கொடுத்து துன்புறுத்துவார்கள்.
லாலா பக்ஷம்: மனைவியைக் கொடுமைப்படுத்தி முறையற்ற மோக இச்சைக்கு ஆளாக்கிக் கெடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்ட பாவிகளும் அதே முறையில் வதைக்கப்படுவார்கள்.
சாரமேயாதனம்: வீடுகளை தீவைத்தல், சூறையாடுதல், உயிர்களை வதைத்தல், விடத்தைக் கொடுத்துக் கொல்லுதல், மக்களைக் கொன்று குவித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்ட பாவிகளை விசித்திரமான கொடிய மிருகங்கள் வதைக்கும்.
அவீசி: பொய்சாட்சி சொல்லி ஒருவருக்கு கெடுதலை விளைவிப்பவர் அடையும் நரகம் இது. நீர் நிலைகளில் ஜீவன்களை தூக்கிவீசி அழுத்துவார்கள்.
பரிபாதனம்: மதுவை தானும் உட்கொண்டு, பிறர்க்கும் கொடுத்து குடிமக்களை கெடுப்பவர்கள் அடையும் நரகம் இது. நெருப்புக்குழம்பை குடிக்கச்சொல்லி இங்கு வதைப்பார்கள்.
க்ஷாரகர்த்தமம்: தீய செயல்களை புரிந்தும், நல்லோரையும், பெரியோரையும் அவமதித்து, நானென்ற அகந்தையுடன் வாழ்ந்த ஜீவன்கள் அடையும் நரகம் இது. இங்கு கோரமான உருவம் கொண்ட பிசாசுகள் ஜீவனை துன்புறுத்தும்.
ரக்ஷோகனம்: நரமேத யாகம் செய்தவனும், மனித மாமிசத்தை புசித்தவனும், வாயில்லா சாதுவான பிராணிகளை வதைத்து கொடுஞ்செயல் புரிந்த பாவிகளும் அடையும் நரகமிது. இங்கு ஜீவன்களால் பாதிக்கப்பட்டவர்களே முன்னின்று வதைப்பார்கள். பாதிக்கப்பட்ட மிருகங்களும் வதைக்கும்.
சூலரோதம்: தற்கொலை, நயவஞ்சகக் கொலை, நம்பிக்கைத் துரோகம் செய்த பாவிகளுக்கு சூலரோதம்.
சுசீமுகம்: அறத்தை செய்யாமல் தீயவழிகளில் பொருளைச் சேர்த்து, பிறரை துன்புறுத்தி கர்வத்துடன் நடந்து, பொருள்களையும், பணத்தையும் பதுக்கி வைத்தவர்கள் அடையும் நரகம் இது. இங்கும் ஜீவன், உதவி செய்ய யாருமின்றி பசியாலும், தாகத்தாலும் தவிக்கும். எம தூதர்கள் துன்புறுத்துவார்கள்.
குந்தசூதம்: வாழ்க்கையில் பிறருக்கு நன்மை எது செய்யாமல் தீமையே செய்து வந்த பாவிகள் அடையும் நரகம் இது. இங்கு தேள் போன்று கொடிய விஷமுள்ள பிராணிகள், ஜீவன்களை கொடுக்குகளால் கொட்டித் துன்புறுத்தும்.
வடாரோகம்: பிராணிகளை கொடுமையாக வதைத்த பாவிகள் அடையும் நரகம் இதுவாகும். ஜீவன்களின் கைகளை கட்டி, நெருப்பு வைத்து துன்புறுத்துவார்கள்.
பர்யாவர்த்தனம்: விருந்தினர்களை உபசரிக்காமல் அவர்களை வெறுத்து நிந்தனை செய்த கஞ்சத்தனம் உள்ளவர்களும், விருந்தினர்களுக்கு உணவளிக்காமல் விரட்டியவர்களும் அடையும் நரகம் இது. இங்கு ஜீவன், உணவும்-நீரும் இன்றி பசியாலும் தாகத்தாலும் தவிக்கும்.