திரவ நைட்ரஜனை நேரடியாக எடுத்துக்கொள்ளும் உணவுகள் மற்றும் பானங்களில் கலக்கக்கூடாது எனவும் அனுமதி வழங்கப்படாத உணவுப் பொருளில் கலந்து தயாரிக்கவும், சமைத்து விற்பனை செய்யவும் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலர் மூலம் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, உணவு பாதுகாப்பு பிரிவு சென்னை உணவுப் பாதுகாப்புத்துறை சார்பாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்மோக் பீடா, திரவ நைட்ரஜனுக்கு அதிரடி தடை உத்தரவு
சமீபத்தில் கர்நாடகாவில் சிறுவன் ஒருவன் திரவ நைட்ரஜன் கலந்த ஸ்மோக் பிஸ்கட்டை சாப்பிட்டதும் மூச்சு விடமுடியாமல் வலியால் துடித்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக திரவ நைட்ரஜனை நேரடியாக எடுத்துக்கொள்ளும் உணவுகள் மற்றும் பானங்களில் கலக்கக்கூடாது எனவும் அனுமதி வழங்கப்படாத உணவுப் பொருளில் கலந்து தயாரிக்கவும், சமைத்து விற்பனை செய்யவும் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலர் மூலம் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, உணவு பாதுகாப்பு பிரிவு சென்னை உணவுப் பாதுகாப்புத்துறை சார்பாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக உணவுகளை உறைய வைக்க, கெட்டுப் போகாமல் பாதுகாக்க திரவ நைட்ரஜன் பயன்படுத்துகிறார்கள். திரவ நைட்ரஜன் தீப்பற்றக்கூடிய ஒரு ரசாயனம் அல்ல. இதில் நச்சுத்தன்மையும் இல்லை இதிலிருந்து ஆவியாகி வரும் புகையைத் தான் நாம் திரவ நைட்ரஜன் கலந்த உணவுகளில் பார்க்கிறோம். அதை அதிகமாக சுவாசிக்கும்போது மூச்சுத்திணறல் உட்பட சில பிரச்னைகள் ஏற்படும், காரணம் நைட்ரஜன் வாயு ஒரு இடத்தில் இருக்கும் ஆக்சிஜன் வாயுவை உடனடியாக வெளியேற்றிவிடும்.
இதன் மிகக் குறைவான வெப்பநிலை காரணமாக பல வருடங்களாக உணவுப் பதப்படுத்தல் துறையில் திரவ நைட்ரஜனை பயன்படுத்தி வருகிறார்கள். முக்கியமாக இறைச்சி வகைகள், மீன் வகைகளை பதப்படுத்த இது பயன்படுகிறது
அரசு கூறியுள்ள விதிகளின் படி தான் திரவ நைட்ரஜன் உபயோகிக்க வேண்டும். இன்னொரு முக்கியமான விஷயம், இவ்வாறு உறைய வைக்கப்பட்ட உணவுகளை உடனடியாக சமைக்கக்கூடாது, சிறிது நேரம் சாதாரண வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும்.
சமீபத்தில் ‘ஸ்மோக் பீடா’ பிரபலமானது. அதில் திரவ நைட்ரஜன் உள்ளது என. அதை வாயில் போட்டு புகை விடுவது ஒரு கேளிக்கையாக பார்க்கப்பட்டது. திரவ நைட்ரஜன் உடலின் உள்ளே செல்லும்போது, வயிறு சார்ந்த கோளாறுகளை ஏற்படுத்தும்.
திரவ நைட்ரஜன் ஒரு உணவே கிடையாது. இது ஜீரோ டிகிரிக்கும் குறைவான வெப்பநிலையில் உணவை பதப்படுத்த, பேக் செய்ய உபயோகப்படுத்தப்படும் ஒரு ரசாயனம். எனவே தான் திரவ நைட்ரஜன் கலந்த நேரடி உணவுப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்கிறது உணவு பாதுகாப்புத்துறை.
அதன்படி, பால், தயிர் போன்றவற்றை பேக்கிங் செய்வதற்கும் குறிப்பிட்ட பழம், பழச்சாறுகள் மற்றும் காபி, டீ கலவை டீ போன்றவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். திராட்சையிலிருந்து பெறப்படும் ஒயினில் ஆக்சிஜனை வெளியேற்றுவதற்கு நைட்ரஜன் பயன்படுத்தலாம். எனவே, வேறு உணவுப் பொருட்களை தயாரிக்கவும், பதப்படுத்தவும், பொட்டலமிடவும் இதனை பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனை மீறுபவர்களுக்கு 2 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுவதுடன், உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உஷாரா இருந்துக்கோங்க.