நிறைய குறை சொல்பவர்களுக்கு பெரிய பரிசு

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 25


சைதை துரைசாமி மேயராக இருந்தபோது பொதுநலச் சங்கங்களுக்கு நிறையவே முக்கியத்துவம் கொடுத்தார். மக்கள் பிரதிநிதிகளைப் போன்று செயல்படும் இந்த சங்கங்களை ஊக்குவிப்பதன் மூலமே குறைகளை களைய முடியும் என்று உறுதியாக நம்பினார்.

ஆகவே, பொதுநலச்ச் சங்கங்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் புரட்சித்தலைவி ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24 அன்று, சிறப்பாக செயல்படும் பொதுநலச் சங்கங்களுக்கு பரிசு வழங்கும் விழா நடத்தினார். அவர்கள் வசிக்கும் பகுதியில், பூங்காவில், பொதுஇடங்களில் இந்த விழாக்கள் நடத்தப்பட்டன.

பொதுநலச் சங்கங்கள் சென்னை மாநகராட்சிக்கு அனுப்பிய புகார்களின் எண்ணிக்கை, அது தொடர்பாக அவர்கள் மேற்கொண்ட தொடர் முயற்சிகள் சேகரிக்கப்பட்டு, பரிசுக்குரிய பொதுநலச் சங்கங்கள் தேர்வு செய்யப்பட்டன. நிறைய குறைகளைக் கூறி தீர்வுகள் கண்ட பொதுநலச்சங்கங்களுக்கு கேடயம், பாராட்டுச் சான்றிதழ் போன்றவை வழங்கப்பட்டன. அது மட்டுமின்றி அனைத்து பொதுநலச் சங்கங்களையும் உற்சாகப்படுத்தும் வகையில் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் பொதுநலச் சங்க பிரதிநிதிகள் மேடையேறி, தங்களுக்கு எந்தெந்த வகையில் எல்லாம் மாநகராட்சி உதவி செய்தது, என்னென்ன பணிகள் செய்து முடிக்கப்பட்டன என்று பொதுமக்கள் முன்பு விவரமாக எடுத்துச் சொன்னார்கள். மாநகராட்சியையும் அரசையும் பொதுநலச் சங்கப் பிரதிநிதிகள் தாங்களாகவே முன்வந்து பாராட்டிப் பேசினார்கள். பொதுமக்கள் குறைகள் தீர்க்கப்பட்டது முதல் வெற்றி என்றால், மாநகராட்சியின் பணியை சங்கப் பிரதிநிதிகள் பேசியது இரண்டாவது வெற்றி,

இவற்றுக்கெல்லாம் காரணம் என்று மேயர் சைதை துரைசாமிக்கு ஒட்டுமொத்த பாராட்டும் வந்து சேர்ந்தது. இதுவரை நாங்கள் எந்த மேயரிடமும் இத்தனை நெருங்கிய தொடர்புடன் இருந்ததில்லை என்று பொதுநலச் சங்க நிர்வாகிகள் வெளிப்படையாகப் பேசியது மட்டுமின்றி, மேயரைப் பாராட்டி தீர்மானமும் நிறைவேற்றினார்கள்.

சென்னை மாநகரம் முழுவதுமுள்ள 1570 பொதுநலச் சங்கங்களும் சைதை துரைசாமியின் காலத்தில் ஊக்குவிக்கப்பட்ட காரணத்தால், அந்தந்த பகுதிக்கு நேரில் செல்லாமலே, அங்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை அறிந்துகொள்ள முடிந்தது. பொதுநல அமைப்புகளை, மாநகராட்சியின் வளர்ச்சிக்கு சிறப்புற பயன்படுத்தியதுதான் சைதையின் முக்கிய சாதனை. மாநகர வரலாற்றில் சைதை துரைசாமியைத் தவிர வேறு யாரும் பொதுநலச் சங்கங்களை பயன்படுத்தியதே இல்லை.. இதுதான் உண்மையான நிர்வாகிக்கு அழகு.

இன்றும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், அதை நடைமுறைக்கு வருவதற்குத் தான் எத்தனை தடைகள்..?

- நாளை பார்க்கலாம்.