ஒரு டீ செலவில் குடும்பத்திற்கு காலை உணவு

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 43


அம்மா உணவகத்திற்கு ஆய்வுக்குச் செல்லும் நேரங்களில் எல்லாம் மேயர் சைதை துரைசாமி அங்கே சாப்பிடும் நபர்களிடம் உரையாடி அவர்களுடைய விமர்சனத்தை அறிந்துகொள்வார்.

அம்மா உணவகத்தில் பரம ஏழைகள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் தொடர்ந்து சாப்பிடும் நிலை உருவாகத் தொடங்கியது. ஆட்டோ டிரைவர்களைப் போலவே சினிமா உதவி இயக்குனர்கள், சினிமா டெக்னீஷியன்கள், வெளி மாநிலத் தொழிலாளர்கள், செக்யூரிட்டி ஊழியர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், சுமை கூலி ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என்று பலரும் அம்மா உணவகத்திற்கு வந்து செல்லத் தொடங்கியதால் கூட்டம் அலைமோதியது.

அம்மா உணவகம் காரணமாக ஏழைகள் வீட்டில் காலை உணவுக் கலாச்சாரம் புகுந்தது. பொதுவாக வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை மக்களுக்கு காலை உணவு என்பது ஆடம்பரச் செலவு போன்றதுதான். காலையில் ஒரு டீ குடித்துவிட்டு தங்கள் வேலையை தொடங்குவார்கள். ஏழை மாணாக்கர்களும் காலை எழுந்ததும் வயிறு நிரம்ப தண்ணீர் குடித்துவிட்டு பள்ளியை நோக்கி ஓடுவார்கள். அங்கே மதியம் கிடைக்கும் சத்துணவுதான் அவர்களுடைய முதல் சாப்பாடாக இருக்கும்.

அந்த நிலைமையை அம்மா உணவகம் அடியோடு மாற்றியது. 20 ரூபாய் இருந்தால் ஒரு குடும்பத்தில் உள்ள நான்கு பேர் காலையில் இட்லி சாப்பிடமுடியும் என்ற நிலைமை உருவானதால், காலையில் உணவு சாப்பிடும் பழக்கம் ஏழைகளிடமும் மீண்டும் உருவானது. கடையில் டீ சாப்பிடும் செலவில், ஒரு குடும்பமே பசியாறியது. அனைவரும் காலை உணவு சாப்பிடத் தொடங்கியதால் அவர்கள் ஆரோக்கியத்திலும் நல்ல மாறுதல் ஏற்பட்டது. அதனால் மருந்துக்கும், மருத்துவருக்கும் கொடுக்க வேண்டிய செலவுகள் குறைந்துபோயின.

அதனால் தமிழ் பத்திரிகைகள் மட்டுமின்றி பிசினஸ் டுடே, வீக் உள்ளிட்ட ஆங்கிலப் பத்திரிகைகளும் அம்மா உணவகத்தின் பயன்பாடு, செயல்திறன், தொலைநோக்குப் பார்வை போன்றவற்றை பாராட்டி எழுதினார்கள். உணவகத்தை உருவாக்கியதோடு சைதை துரைசாமி திருப்தி அடைந்துவிடவில்லை. மென்மேலும் இதனை மேம்படுத்தும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இரவு உணவு பற்றி ஏற்கெனவே அவர் சிந்தித்துவந்த நேரத்தில் ஆட்டோ டிரைவரும் ஆசையை தெரிவித்தார்.

எனவே, அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கினார் சைதை துரைசாமி.

- நாளை பார்க்கலாம்.