புதுவையில் தங்கள் கட்சிக்கு சீட் ஒதுக்காத காரணத்தால், காங்கிரஸ், - திமுக கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சி வெளியேறி தனியே போட்டியிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் திடீர் பிளவு..? டென்ஷன் கம்யூனிஸ்ட்
புதுச்சேரியில் காங்கிரஸுக்கு 15 இடங்களும், திமுகவுக்கு 13 இடங்களும், கூட்டணி கட்சிகளுக்கு இரு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகளும், மற்றொரு தொகுதியில் சி.பி.ஐ. கட்சியும் போட்டியிடுகிறது.
இந்த நிலையில், சிபிஎம் கட்சிக்கு ஒரு இடம் கூட மதசார்பற்ற அணியில் ஒதுக்கப்படவில்லை. எனவே, சிபிஎம் கட்சி நிர்வாகிகள் கூடி அவசர ஆலோசனை கூட்டத்தில் விவாதித்து வருகின்றனர். இதுதொடர்பாக கட்சி முக்கிய நிர்வாகிகள் கூறுகையில், "மதசார்பற்ற அணியில் காங்கிரஸ், -திமுக கூட்டணியில் சிபிஎம் இடம் பெற்றிருந்தது. தேர்தலில் நாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளை தெரிவித்திருந்தோம். ஆனால், புதுச்சேரியில் சிபிஎம் கட்சிக்கு ஓரிடம் கூட ஒதுக்கவில்லை.
தவறான முடிவை எடுத்துள்ளதால் நாங்கள் தனித்து ஐந்து தொகுதிகளில் போட்டியிட முடிவு எடுத்துள்ளோம். அத்துடன் மாஹேயில் சுயேட்சை வேட்பாளருக்கும் ஆதரவு தருகிறோம். கூட்டம் முடிந்து இதற்கான அறிவிப்பை இன்றுக்குள் அறிவிப்போம்" என்று குறிப்பிட்டனர்.
ஏற்கெனவே காங்கிரஸ் வெற்றிக்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படும் நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியும் வெளியேறுவது பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.