விக்கிரவாண்டியில் எடப்பாடி பழனிசாமி ரகசியக் கூட்டணி

அதிர்ச்சியில் பிரேமலதா


விக்கிரவாண்டி தொகுதியில் நான்கு முனைப் போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ‘சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ள, நிர்வாகத் திறனற்ற அராஜக விடியா திமுக ஆட்சியில் 10.7.2024 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை கழகம் புறக்கணிக்கிறது’ என்று அறிவித்து எஸ்கேப் ஆகியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

இதையடுத்து அ.தி.மு.க.வினர் எடப்பாடியின் முடிவைக் கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒன்றுபட்ட அதிமுகவுக்கு முயற்சிகளை எடுத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுகிற வாய்ப்பை தவற விட்டுவிட்டு, பாஜக மற்றும் திமுக வளர்ச்சிக்கு உரமிடுகிற வகையில் தேர்தல் புறக்கணிப்பை அறிவித்திருக்கிறார் எடப்பாடி என்று அவர் கட்சியினரே கவலைப்படுகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி முடிவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு, ‘ஒரு மாநில கட்சி மட்டுல்ல; மாநிலத்தில் தி.மு.க. போன்றே வாக்கு வங்கி அதிகம் கொண்ட கட்சி. நடைபெறப்போகும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

தமிழ்நாட்டில் இதற்கு முன் அதாவது, 2009 ஆண்டு நடைப்பெற்ற தொண்டாமுத்தூர், பர்கூர்,கம்பம், இளையான்குடி,ஶ்ரீவைகுண்டம் ஆகிய 5 தொகுதிகளில் நடைப்பெற்ற இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அன்றைய பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்கள் அறிவித்தார். ஆனால்,அடுத்து வந்த திருச்செந்தூர்,வந்தவாசி தொகுதிகளில் நடைப்பெற்ற இடைத்தேர்தலில் பங்கேற்பதாகவும் இனி இடைத்தேர்தல்களை புறக்கணிக்க மாட்டோம் எனவும் அம்மையார் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

ஆனால், ஜெயலலிதா வழியில் நடப்பதாக சொல்லும் எடப்பாடியார் அவர்கள் அம்மையாருக்கு எதிரான முடிவை எடுத்து மீண்டும் அதிமுகவுக்கு துரோகம் செய்துள்ளார். இதுவரை இடைத்தேர்தல்களை புறக்கணித்தே வந்த பாமக விக்கிரவாண்டியில் போட்டியிட முடிவு செய்தமைக்கும், அதிமுக புறக்கணித்தமைக்கும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதாகவே சொல்ல முடியும்.

அதிமுகவின் இந்த புறக்கணிப்பு முடிவு மறைமுகமாக கூட அல்ல; நேரடியாகவே பாஜக கூட்டணியில் உள்ள பாமகவை ஆதரிப்பதாகவே பொருள். பாஜக- அதிமுகவின் கள்ள உறவை விக்கிரவாண்டி தொகுதி மக்கள் புரிந்து கொண்டு திமுகவுக்கே வாக்களிப்பது உறுதி. இப்போதே திமுக வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது’ என்று கூறியிருக்கிறார்.

இந்த விஷயத்தில் பிரேமலதாவே பெரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். பா.ம.க.வுடன் உறவு வைக்கும் பட்சத்தில் தங்கள் நிலைக்குச் சிக்கல் என்பதால் திகிலில் இருக்கிறார் பிரேமலதா.

எது எப்படியோ, தி.மு.க.வுக்குக் கொண்டாட்டம் தான்.