ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவுக்கு நல்ல யோகமடா..!

முன்னாள் முதல்வர்களான, ஜெயலலிதா மற்றும், கருணாநிதி ஆகியோரின் இறுதிச் சடங்குகளை குறுகிய காலத்தில் திட்டமிட்டு செயல்படுத்தி, தமிழகத்தில் அனைத்து கட்சியினரிடமும் நல்ல பெயர் சம்பாதித்து வைத்திருப்பவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா.


இதில் என்ன சிறப்பு என்றால், கருணாநிதியின் இறுதிச் சடங்கு, மெரினா கடற்கரையில்தான் நடைபெறப் போகிறது என்பது இவருக்கு சுமார் 5 மணி நேரம் முன்பாகத்தான் சொல்லப்பட்டது. அந்த குறுகிய நேரத்தில் அத்தனை துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தி பிரமாண்டம் காட்டினார். 

கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரவரது ஆட்சி காலங்களிலும் நற்பெயரை ஈட்டிய அதிகாரியான அமுதா, எந்த கட்சியின் வளையத்திலும் சிக்கிக்கொள்ளாதவர், சர்ச்சைகளில் மாட்டிக் கொள்ளாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரையை சேர்ந்த அமுதா, தற்போது உத்தரகாண்டில் உள்ள முசோரி ஐ.ஏ.எஸ் அகாடமியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், அமுதாவுக்கு பிரதமர் அலுவலக இணை செயலாளராக மத்திய அரசு பதவி வழங்கி கவுரவித்துள்ளது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியாகும். இங்கேயும் அமுதா நல்ல பெயரெடுப்பார் என்பதை சொல்லவே வேண்டியதில்லை.