வீட்டில் சமைத்த உணவை இரவு சாப்பிட்ட பாட்டி - பேத்தி..! அடுத்தடுத்து வாந்தி எடுத்து உயிரிழந்த பகீர் சம்பவம்!

இரவு உணவை சாப்பிட்ட சிறுமியும், பாட்டியும்  உயிரிழந்த சம்பவமானது ஓசூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட புட்டூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருக்கு அர்ச்சனா என்ற 14 வயது மகளும், கீர்த்தனா என்ற 9 வயது மகளும் உள்ளனர். இவர்கள் மூவரும் ராஜேஸ்வரியின் தாயாரான பாரம்மாளுடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் வீட்டில் சமைக்கப்பட்ட உணவை 19-ஆம் தேதி இரவன்று 4 பேரும் உட்கொண்டனர். அதன் பின்னர் 4 பேருக்கும் உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. 4 பேரும் கடுமையான வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டனர். உடனடியாக அவர்களை அக்கம்பக்கத்தினர் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்‌. 

நேற்று சிகிச்சை பலனின்றி கீர்த்தனாவும், பாரம்மாளும் உயிரிழந்தனர். உடனடியாக உறவினர்கள் கீர்த்தனாவின் உடலில் மயானத்தில் புதைத்தனர். பாரம்மாள் உடலை புதைக்க முற்பட்ட வேளையில் காவல்துறையினர் மயானத்திற்கு விரைந்து வந்து அதனை தடுத்து நிறுத்தி, அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கீர்த்தனாவின் உடலை தோண்டி வெளியே எடுத்த பின்னர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகே எதனால் 2 பேரும் உயிரிழந்தனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜேஸ்வரி மற்றும் அர்ச்சனா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த சம்பவமானது புட்டூர் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.