குஜராத்தில் மெகா போதை ஃபேக்டரி… நாடு முழுக்க சப்ளை

குஜராத் தலைநகர் காந்திநகரில் ஒரு மிகப்பெரிய போதைப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலையும், அம்ரேலி பகுதியில் ஒரு தொழிற்சாலையும் இயங்குவதும் கண்டறியப்பட்டுள்ளது. இங்கிருந்து தான் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு போதைப் பொருட்கள் வருவதாகத் தெரிகிறது. தமிழகத்தில் போதைப் பொருட்கள் விவகாரத்தில் தி.மு.க. மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறிவரும் பா.ஜ.க.வினர் இதுகுறித்து வாயையே திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


குஜராத்திலும், ராஜஸ்தானிலும் மிகப்பெரிய போதைப்பொருள் தயாரிப்புக் கூடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆலைகளில் இருந்து ஏராளமான போதைப்பொருட்களும், அதனை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அண்மைக்காலமாக இந்தியா முழுவதும் போதைப்பொருட்களின் புழக்கம் பல மடங்கு அதிகரித்துள்ளது. வட மாநிலங்களிலும், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் கஞ்சா, ஹெராயின் என உள்நாட்டு போதைப்பொருட்கள் முதல் மெத்தபேட்டைமைன் வரையிலான வெளிநாட்டு போதைப்பொருட்களும் அதிக அளவில் புழங்கி வருகிறது.

சென்னையில் அண்மையில் 2,500 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக திமுக முன்னாள் பிரமுகர் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். இது தமிழக அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், வட மாநிலங்களில் போதைப்பொருட்களை சட்டவிரோத கும்பல்கள் அதிக அளவில் தயாரிப்பதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு (என்சிபி) தகவல் கிடைத்தது. இதன்பேரில், போதைப்பொருள் தடுப்பு பிரிவும், குஜராத் தீவிரவாத தடுப்புப் படையும் இணைந்து தேடுதல் வேட்டையில் இறங்கின. இதில் குஜராத் தலைநகர் காந்திநகரில் ஒரு மிகப்பெரிய போதைப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலையும், அம்ரேலி பகுதியில் ஒரு தொழிற்சாலையும் இயங்குவதும் கண்டறியப்பட்டுள்ளது.

இங்கிருந்து தான் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு போதைப் பொருட்கள் வருவதாகத் தெரிகிறது. தமிழகத்தில் போதைப் பொருட்கள் விவகாரத்தில் தி.மு.க. மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறிவரும் பா.ஜ.க.வினர் இதுகுறித்து வாயையே திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.