சைதை துரைசாமிக்கு வீடு, ஸ்கூட்டர் லஞ்சம்..?

ஒரு பைசாகூட வாங்காமல் ஆயிரக்கணக்கான பேருக்கு வீடு ஒதுக்கீடு செய்துகொடுத்தார். நடைபாதை வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் வாங்கிக்கொடுத்தார். இதுவெல்லாம் தெரியவந்ததும் அவரிடம் எங்கள் கோரிக்கையைக் கொண்டுசென்றோம். யார் யாரையோ சந்தித்து, எங்களுக்கு பதவி உயர்வு வாங்கிக் கொடுத்தார்.


என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 9

சைதை துரைசாமி பற்றி தொடர் வருவது அறிந்த முஸ்தபா என்ற முன்னாள் குடிசை மாற்று வாரிய ஊழியர் சங்க பிரதிநிதி ஒருவர் பேசினார்.

‘’நாங்கள் ஒர்க் அசிஸ்டென்ட் பதவியில் இருந்தபோது நியாயமாக எங்களுக்குக் கிடைக்கவேண்டிய பதவி உயர்வு பல ஆண்டுகளாகப் போராடியும் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில்தான் குடிசைமாற்று வாரிய உறுப்பினராக 1977-ம் ஆண்டு சைதை துரைசாமி பொறுப்புக்கு வந்தார். அப்போது சைதை துரைசாமி சைக்கிள் மட்டுமே வைத்திருந்தார். எனவே தூரமாகச் செல்ல வேண்டியிருந்தால் யாராவது ஒரு நண்பரின் ஸ்கூட்டருக்குப் பின்னே உட்கார்ந்து தான் சைதை துரைசாமி வருவார்.

ஒரு பைசாகூட வாங்காமல் ஆயிரக்கணக்கான பேருக்கு வீடு ஒதுக்கீடு செய்துகொடுத்தார். நடைபாதை வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் வாங்கிக்கொடுத்தார். இதுவெல்லாம் தெரியவந்ததும் அவரிடம் எங்கள் கோரிக்கையைக் கொண்டுசென்றோம். யார் யாரையோ சந்தித்து, எங்களுக்கு பதவி உயர்வு வாங்கிக் கொடுத்தார்.

இதனால் மகிழ்ச்சியடைந்த ஊழியர்கள் ஒன்றுசேர்ந்து சைதை துரைசாமிக்கு மரியாதை செய்வதற்கு ஆசைப்பட்டோம். ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு ஒன்றே கால் லட்சம் ரூபாய்க்கு ஒரு வீடும், ஒரு ஸ்கூட்டரும் வாங்கிக் கொடுக்கத் திட்டம் போட்டோம். இதனை எப்படியோ தெரிந்துகொண்ட சைதை துரைசாமி கோபமாகிவிட்டார்.

எனக்கு நீங்கள் அன்பளிப்பு கொடுப்பது, எனது நேர்மையை கொச்சைப்படுத்தி என்னை அவமானப்படுத்துவதற்கு சமம். அதனால் உங்கள் ஏற்பாட்டை உடனே நிறுத்திவிடுங்கள். இல்லையென்றால் உங்கள் பதவி உயர்வு உத்தரவை ஏதேனும் காரணம் காட்டி நிறுத்திவிடுவேன் என்று எச்சரித்தார்.

கேட்டும் அடித்துப் பிடுங்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் கொடுப்பதை வேண்டாம் என்று சொல்பவர் சைதை துரைசாமி மட்டும்தான். கட்சியில் நுழைந்த காலத்தில் இருந்து, இன்று வரை சேவை செய்யும் மனப்பான்மையையும் நேர்மையையும் அவர் கைவிட்டதே இல்லை’’ என்று கூறினார்.

குடிசைமாற்று வாரிய உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினராக, மனிதநேயத் தலைவராக தன்னுடைய வெற்றித் தடம் படைத்த சைதை துரைசாமியால் மேயராக வெற்றிபெற முடிந்ததா..?

- நாளை பார்க்கலாம்