திருவனந்தபுரம்: கேரளாவில் ஐஏஎஸ் அதிகாரியின் கார் மோதியதில் பத்திரிகையாளர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முழு போதை! அருகே இளம்பெண்! அதிவேகத்தில் கார் ஓட்டிய IAS அதிகாரி டூ வீலரை அடித்து தூக்கிய பயங்கரம்! நிர்கதியான 1 பெண்! 2 குழந்தைகள்!
மலையாளத்தில் வெளியாகும் சிராஜ் என்ற செய்தித்தாளின் மூத்த செய்தி ஆசிரியராக பணிபுரிந்தவர் கே.எம்.பஷீர். இவர், வெள்ளிக்கிழமை இரவு பணி முடிந்ததும், நள்ளிரவு 1 மணியளவில் , தனது வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அப்போது எதிரே ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கிடாராமன் என்பவர் குடிபோதையில் வேகமாக காரை ஓட்டி வந்து, பஷீரின் பைக் மீது மோதியுள்ளார். இதில், தூக்கி வீசப்பட்ட பஷீர், நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து திருவனந்தபுரம் பப்ளிக் ஆபிஸ் காம்ப்ளக்ஸ் எதிரே உள்ள சாலையில் நிகழ்ந்துள்ளது. இந்த விவகாரத்தில் காரை தான் ஓட்டவில்லை என்று கூறி பலவிதமாக வழக்கை திசை திருப்ப முயன்ற ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கிடராமனை போலீசார் உடனடியாகக் கைது செய்தனர். விசாரணையில் திருவனந்தபுரம் ஐஏஎஸ் அதிகாரிகள் கிளப்பில் ஒரு பார்ட்டி நடந்துள்ளது.
இந்த பார்ட்டியை முடித்த ஸ்ரீராம் தனது தோழி வாஃபா பிரோஸ் என்பவரை காரை எடுத்துவருமாறு கூறியுள்ளார். இதனை அடுத்து வாஃபா காருடன் ஸ்ரீராமை சந்தித்துள்ளார். முழு போதையில் இருந்த ஸ்ரீராம் வாஃபாவை வற்புறுத்தி காரை ஓட்டுவதாக கூறி ஓட்டிச் சென்ற போது தான் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
முதலில் போலீஸ் காரை ஓட்டியதாக வாஃபா பிரோஸ் மீது வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் விசாரணைக்கு பிறகு வழக்கு ஸ்ரீராம் மீது பதியப்பட்டது. ஒரு ஐஏஎஸ் அதிகாரியே இப்படி குடிபோதையில் கார் ஓட்டி, இளம் பத்திரிகையாளரின் உயிரை பறித்த சம்பவம் கேரளா மட்டுமின்றி இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்ட ஒழுங்கை பாதுகாத்து பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டிய ஐஏஎஸ் அதிகாரி இப்படி சாலை விபத்து செய்துள்ளதற்கு, சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் உயிரிழந்த பசீருக்கு ஒரு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனால் அவர்கள் நிர்கதியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.