ஐ.ஐ.டி. ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு ரத்தா? டென்ஷனாகும் ராமதாஸ்

இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களின் (ஐ.ஐ.டி) பேராசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு வல்லுனர் குழு பரிந்துரை செய்திருக்கிறது. அடிப்படை இல்லாத, சமூகநீதிக்கு எதிரான, மிகவும் அபத்தமான இந்த பரிந்துரை கண்டிக்கத்தக்கது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் நியமனத்தில் மட்டுமின்றி, மாணவர் சேர்க்கையிலும் இட ஒதுக்கீட்டை பயனுள்ள வகையில் செயல்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக தில்லி ஐ.ஐ.டி இயக்குனர் ராம்கோபால் ராவ் தலைமையில் ஒரு வல்லுனர் குழுவை கடந்த ஏப்ரல் மாதம் மத்திய உயர்கல்வித்துறை அமைத்தது.

அக்குழுவின் அறிக்கை கடந்த ஜூன் மாதம் தாக்கல் செய்யப்பட்டு, இப்போது அரசின் ஆய்வில் உள்ளது. வல்லுனர் குழுவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் பற்றி தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி பெறப்பட்ட விவரங்களில் தான் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய அந்தக் குழு பரிந்துரைத்திருப்பது தெரியவந்துள்ளது.

‘‘கற்பித்தல், ஆராய்ச்சி, திறமையான மாணவர்களை உருவாக்குதல் உள்ளிட்டவற்றில் உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களுடன் போட்டியிட வேண்டும் என்பது தான் ஐ.ஐ.டி-க்களின் இன்றையத் தேவையாகும். அதற்கு ஐஐடி-க்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்குத் தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, இட ஒதுக்கீடு வழங்க வேண்டியத் தேவையில்லை.

அதுமட்டுமின்றி, ஐ.ஐ.டிக்களில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கு தகுதியான ஆட்கள் இட ஒதுக்கீட்டுப் பிரிவிலிருந்து கிடைப்பதில்லை’’ என்று அக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தான் அபத்தமான வாதம் என்று கூறுகிறேன்.

இட ஒதுக்கீடு வழங்குவதால் தகுதியும், திறமையும் பின்னுக்குத் தள்ளப்படுவதாக கூறப்படுவதே சமூகநீதிக்கு எதிரான சதியாகும். இட ஒதுக்கீடு எந்த வகையிலும் தகுதியை பாதிப்பதில்லை என்பது பல்வேறு தருணங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐ.ஐ.டிக்களில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கு தகுதியான ஆட்கள் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரில் இல்லை என்று வல்லுனர் குழு கூறியிருப்பது இட ஒதுக்கீட்டுப் பிரிவினரை சிறுமைப்படுத்தும் செயலாகும். ஐ.ஐ.டி பேராசிரியர்,

இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட அனைத்துப் பணிகளுக்குமான தகுதி சம்பந்தப்பட்ட துறையில் முனைவர் பட்டம் பெற்றிருப்பதும், கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சிறப்பாக செயல்பட்டிருப்பதும் தான். இந்தத் தகுதிகளைக் கொண்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினர் ஏராளமாக இருக்கும் நிலையில், அவர்களுக்கு இத்தகுதி இல்லை என்ற முடிவுக்கு எந்த அடிப்படையில் வல்லுனர் குழு வந்தது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

ஐ.ஐ.டிகள் எனப்படுபவை ஒரு பிரிவினருக்கு மட்டுமே சொந்தமான தனி உலகம். அங்கு தகுதிகள் அடிப்படையில் நியமனம் நடைபெறுகிறது என்பதே குரூரமான நகைச்சுவை தான். ஒன்றாம் வகுப்புக்கு பாடம் நடத்தும் இடைநிலை ஆசிரியர் பணிக்கு கூட முதலில் தகுதித் தேர்வு, பின்னர் போட்டித்தேர்வு என்று இரு தேர்வுகள் நடத்தப்பட்டு, அதனடிப்படையில் தான் நியமனங்கள் நடைபெறுகின்றன. ஆனால், ஐ.ஐ.டி ஆசிரியர் பணிக்கு அத்தகையத் தேர்வுகள் எதுவும் கிடையாது.

நேர்காணல் அடிப்படையில் தான் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதிலும் கூட இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் விண்ணப்பங்கள் ஆய்வு நிலையிலே நிராகரிக்கப்பட்டு, ஐ.ஐ.டி நிர்வாகத்துக்கு வேண்டியவர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு தாராளமாக மதிப்பெண்கள் அளிக்கப்பட்டு, பணி வழங்கப்படுகிறது. இப்படி ஒரு சார்பான ஆள்தேர்வு முறையை வைத்துக் கொண்டு இடஒதுக்கீடுப் பிரிவினருக்கு போதிய தகுதி இல்லை என்று கூறுவதை விட மோசமான மோசடி இருக்க முடியாது.

ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டால் ஐ.ஐ.டிகளின் தரம் உயர்ந்து விடும் என்று கூறுவதும் ஏமாற்று வேலை தான். ஐ.ஐ.டி ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருந்தாலும் கூட, அது நடைமுறையில் இல்லை; ஏட்டளவில் மட்டும் தான் உள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் ஆகிய பிரிவினருக்கு 49.50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தாலும் கூட, ஐ.ஐ.டிகளின் ஒட்டுமொத்த ஆசிரியர்கள் எண்ணிக்கையில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் விகிதம் ஒற்றை இலக்கத்தைக் கூட தாண்டவில்லை என்பது தான் உண்மை.

தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் உயர்வகுப்பினர் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலாக இருந்தாலும் கூட, ஐ.ஐ.டிகளின் தரம் உயரவில்லை. அத்தகைய சூழலில், இட ஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டால் ஐ.ஐ.டிகளின் தரம் உயர்ந்து விடும் என்பது நச்சுத்தன்மை கலந்த பரிந்துரையாகும். இப்படி கூறுவதை விட ஐ.ஐ.டிகளில் ஓ.பி.சி, பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் ஆகிய இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு இடமில்லை என்று அவற்றின் நுழைவாயிலில் அறிவிப்புப் பலகை வைத்து விடலாம்.

ராமகோபால்ராவ் தலைமையிலான வல்லுனர் குழு அமைக்கப்பட்டதன் நோக்கமே இட ஒதுக்கீட்டை எவ்வாறு சிறப்பாக செயல்படுத்தலாம் என்பது குறித்து பரிந்துரைப்பதற்காகத் தான். ஆனால், அந்த குழுவோ இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்திருப்பது நகைமுரண் ஆகும்.

இதன் மூலம் இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் இன்னும் எவ்வளவு காலம் தான் ஏமாற்றப் படுவார்களோ என்பது தெரியவில்லை. சமூகநீதிக்கு எதிரான இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்கக்கூடாது. மாறாக ஐ.ஐ.டிகளில் பணி நியமனத்தை வெளிப்படையானதாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வல்லுனர் குழுவின் பரிந்துரை ஏற்கப்பட்டால், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் ஆகிய பிரிவினரை திரட்டி மாபெரும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும்.