ஜெயலலிதாவுக்கு உளவுத்துறை ரிப்போர்ட்

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 45


புரட்சித்தலைவர் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் மாறி மாறி ஆட்சிக்கு வந்தன. அதன்படி 2011ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி முடிந்து தேர்தல் நடந்த சமயத்தில், மீண்டும் தி.மு.க.வே ஆட்சிக்கு வரும் என்றே அரசியல் விமர்சகர்கள் கணித்தார்கள்.

ஆனால், 2016 தமிழக சட்டப் பேரவை தேர்தலில் அ.தி.மு.க.-வுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி கிடைத்தது. ஜெயலலிதா மீண்டும் முதல்வர் பதவியில் அமர்ந்தார். ஆளும் கட்சி மீது வழக்கமாக மக்களுக்கு இருக்கும் அதிருப்தியைத் தாண்டி அ.தி.மு.க. இந்த தேர்தலில் வெற்றி அடைந்தது அரசியல் விமர்சகர்களிடம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்த வெற்றிக்கு பல்வேறு காரணங்கள் மேடைகளில் பேசப்பட்டன.

அந்த நேரத்தில் உளவுத்துறை அதிகாரி ஒருவர் சைதை துரைசாமியை சந்தித்த நேரத்தில் வெற்றிக்கான காரணத்தை புட்டுப்புட்டு வைத்தார். இப்போதும் அவர் பதவியில் இருக்கிறார் என்பதால் அவருடைய பெயர், பதவி எதையும் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால், அவர் பேசியதில் ஒரு பகுதியை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

‘’அனைத்து மீடியாக்களும், பத்திரிகைகளும் ஜெயலலிதாவுக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவு என்று ஆணித்தரமாக ஆருடம் கூறிவந்தன. அதனால் தேர்தலுக்கு முன்பு கீழ்த்தட்டு மக்களிடம் நாங்கள் மிக ரகசியமாக விரிவாக ஓர் ஆய்வு மேற்கொண்டோம்.

ஜெயலலிதா கொண்டுவந்த தாலிக்குத் தங்கம் திட்டம், ஏழை மக்களிடம் அமோக வரவேற்பு பெற்றிருந்தது, அதுபோல் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து மாவு வழங்கும் திட்டம், அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கு 16 பரிசு பொருட்கள் வழங்கும் திட்டம், இலவச கறவை மாடு, வெள்ளாடுகள் வழங்கும் திட்டம், கிராமத்தில் உள்ள பெண்கள், மாணவிகளுக்கு இலவச சானிடரி நாப்கின் வழங்கும் திட்டம், இலவச மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர், பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் போன்ற திட்டங்கள் மக்கள் மனதில் அழியாத இடம் பிடித்திருந்தன.

ஆனால், இவை எல்லாவற்றையும் விட ஒரு விஷயத்தை அத்தனை பேரும் மறக்காமல் சொன்னார்கள்…’’ என்றார். அது என்ன?

- நாளை பார்க்கலாம்.