ஸ்டாலின் வெற்றிக்குக் காரணம் சபரீசன்..?

மாப்பிள்ளைக்கு கோவையில் செம வரவேற்பு


தி.மு.க.வின் முப்பெரும் விழா பிரமாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது. இது தொண்டர்களின் வெற்றி, கூட்டணிக் கட்சியினரின் வெற்றி என்றெல்லாம் ஸ்டாலின் பேசினாலும், அங்கே சபரீசனுக்குக் கிடைத்த வரவேற்பு நிறையவே கேள்வி எழுப்பியிருக்கிறது.

இந்த விழாவில் பேசிய ஸ்டாலின், ‘’அது எங்க கோட்டை, இது எங்க கோட்டை" என்று கனவுக்கோட்டை கட்டியவர்களுக்குத் "தமிழ்நாடு என்றைக்குமே திராவிடக் கோட்டை என்று நாற்பதுக்கு நாற்பது தீர்ப்பின் வழியாகத் தமிழ்நாட்டு மக்கள் உணர்த்தியுள்ளார்கள்! நன்றி!

தேர்தல் பிரச்சாரத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு பேச்சுக்களை பேசினார்கள், தமிழர்கள் குறித்து அவதூறு பரப்பினார்கள்; வாட்ஸ் ஆப்பில் பொய்ச் செய்திகளை பரப்பினார்கள். இவ்வளவும் செய்தும் பாஜக பெரும்பான்மை பெறவில்லை. இப்போது அவர்கள் பெற்றிருப்பது வெற்றியல்ல; தோல்விதான்.

இந்தியா கூட்டணித் தலைவர்கள் அனைவருக்கும் நடைபெறும் பாராட்டு விழா இது! இந்தியா கூட்டணி தொண்டர்கள் அனைவருக்கும் நடைபெறும் பாராட்டு விழா இது’’ என்று பேசினார்.

அதேநேரம், விழாவுக்கு வருகை தந்த சபரீசனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து பேசும் சீனியர் நிர்வாகிகள், ‘இந்த தேர்தலுக்கு பிரசாந்த் கிஷோர், சுனில் போன்றோர் இல்லாமல் அத்தனை வேலைகளையும் சபரீசனின் டீம் இழுத்துப்போட்டுச் செய்தது. அதனாலே பிரமாண்ட வெற்றி கிடைத்திருக்கிறது.

இனிமேல் சபரீசன் மட்டுமே தி.மு.க. வியூக வகுப்பாளர், வேறு யாரும் தேவையில்லை. அதனை காட்டும் வகையிலே வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவரும் ஒவ்வொரு தொகுதிக்கும் நேரில் போய் ஆய்வு செய்து கடுமையாக உழைத்திருக்கிறார்’’ என்கிறார்கள்.

குடும்பத்துக்காக இது கூட செய்ய மாட்டாரா என்ன?