இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை அல்ல என்றும், இட ஒதுக்கீடு வழங்குமாறு அரசாங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும் உத்தரகாண்ட் மாநில உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் அளித்த தீர்ப்பை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொல். திருமாவளவன் தொடுத்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் எதிர்வரும் 17 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை இல்லையா? உச்ச நீதிமன்றத்தில் திருமா வழக்கு
முகேஷ் குமார் - எதிர் -உத்தரகாண்ட் மாநிலம் என்ற வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற அமர்வு இட ஒதுக்கீட்டை தகர்க்கும் விதமாக அந்தத் தீர்ப்ப்பில் கருத்துகளைத் தெரிவித்தது. இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை இல்லை என்றும், இட ஒதுக்கீடு வழங்குமாறு எந்த ஒரு அரசாங்கத்துக்கும் நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும், இட ஒதுக்கீடு சரியாக நடைமுறைப் படுத்தப்பட்டு இருக்கிறதா என்று அரசாங்கத்தை நீதிமன்றம் மூலமாக கேட்க முடியாது என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது .
இட ஒதுக்கீட்டை ஒட்டுமொத்தமாக புதைகுழிக்குள் தள்ளுகிற இந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதி நாகேஸ்வரராவ் இப்பொழுது பதவி உயர்வு பெற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கிறார். அங்கும் இதே கருத்தைத்தான் அவர் தொடர்ந்து கூறி வருகிறார். இந்த தீர்ப்பை அனுமதித்தால் எதிர்காலத்தில் இட ஒதுக்கீடு என்பதே இல்லாமல் போய்விடும். அதுமட்டுமின்றி இட ஒதுக்கீடு சரியாக நடைமுறைப்படுத்தாத மத்திய மாநில அரசுகளை எவரும் கேள்வி கேட்கவும் முடியாமல் ஆகிவிடும்.
உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பார்த்தால் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை; அது அரசாங்கமே மனமிரங்கிச் செய்கிற ஒன்று என்றே ஆகிறது. இது நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் கட்டிக் காத்து வரும் சமூகநீதிக் கோட்பாட்டுக்கு எதிரானதாகும். எனவே தான் இந்தத் தீர்ப்பை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உச்சநீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு வெளியான உடனேயே வழக்கு தொடுத்தது. அது இப்போதுதான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. சமூக நீதியில் அக்கறை உள்ளவர்கள் இந்த வழக்கில் தம்மையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.