தமிழகத்துக்கு பரதம் போல, ஒரிசாவுக்கு ஒடிசி போல கேரளத்துக்கு கதகளி.
கதகளியை கடவுளே நேரில்வந்து தரிசித்த புனித தலம் இது!
கேரள கோவில் கலையான கதகளி பிறந்தது திருவல்லாவில்தான். பல நூறு வருடங்களாக ஸ்ரீவல்லப க்ஷேத்திரத்தில் இரவு வழிபாட்டில் இடம் பிடித்து வந்த களியும் கதையும் இணைந்த நாட்டிய நாடகமே கதகளி.
ஒருமுறை இந்த ஸ்தலத்தில் பிராமணர் வேடத்தில் அமர்ந்து கதகளியை ஸ்ரீ கிருஷ்ணர் ரசித்துக் கொண்டிருப்பதை கண்டாராம் வில்வமங்கல சுவாமிகள். சுவாமிகள் கண்டுகொண்டார் என்று தெரிந்ததும் அப்படியே மறைந்து விட்டாராம் ஸ்ரீகிருஷ்ணர். கிருஷ்ண பகவானை ரசிக்க விடாமல் செய்து விட்டோமே என்று வில்வமங்கல சுவாமிகள் சோகத்துடன் அமர, கவலை வேண்டாம் தினமும் ஒரு வேடத்தில் நான் வந்து கதகளி காணுவேன் என்று ஆசிரீரி கேட்டதாம்.
அன்றிலிருந்து, ஸ்ரீவல்லப க்ஷேத்திரத்தில் உள்ள கதகளி மண்டபத்தில் தினசரி இரவு வழிபாடாக கதகளி நடைபெற்று வருகிறது. மேடையில் குத்துவிளக்கை ஏற்றி வைத்ததும் ஒரு நாற்காலியை போட்டு அதன் மீது சிவப்பு நிற பட்டுத் துணியை போட்டு வைக்கிறார்கள். அது ஸ்ரீகிருஷ்ணருக்காம்! பகவானே வந்து கதகளி பார்க்கிறார் என்பதால் மிகவும் பக்தி சிரத்தையுடன் சிறந்த நாட்டிய பாவங்களுடன் கதகளியை நடத்துகிறார்கள்.
ஆண் கலைஞர்கள் மட்டுமே பங்குபெறும் கதகளியின் முக்கிய அம்சம் முக அலங்காரம் தான். கதகளிக்கு செய்யப்படும் முக ஒப்பனைக்கு பச்சை, வெள்ளை, சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் நிறங்களையே உபயோகிக்கிறார்கள். கிருஷ்ணர் ராமர் உள்ளிட்ட தெய்வங்கள் முகத்தில் பச்சை நிறம் பூசியிருப்பார்கள்.
தெய்வங்கள் ராஜாக்கள் முகத்தில் தாடையின் கீழ் கட்டி என்கிற வெள்ளை நிற கவசம் அணிந்து இருப்பார்கள். பெண் தெய்வங்கள் பச்சை மற்றும் மஞ்சள் நிற முகத்துடன் வலம் வருவார்கள். அரசிகள், தெய்வங்களின் தோழி பெண்கள் நிறம் பூசாத சாதாரண முகத்துடன் இருப்பார்கள். அசுர கதாபாத்திரங்கள் முகத்தில் கருமை நிறம் பூசியிருப்பார்கள்.
கைகள், கால்கள் என உடல் முழுவதும் மறைந்திருக்கும்படி பளிச் உடைகளையும் நகைகளையும் அணிந்து கொள்வார்கள். கதகளி ஆரம்பமாகும் முன்பு முதலில் குத்துவிளக்கு ஏற்றி வைக்கப்படும். பிறகு இருவர் ஒரு திரைச்சீலையை இருபக்கமும் இழுத்து பிடித்தபடி மேடையின் இடமும் வலமுமாக நிற்பார்கள்.
கதையின் பிரதான கதாபாத்திரம் தனது முகம் மட்டும் திரைச்சீலைக்கு மேலாக தெரியும் படி வந்து நிற்கும். ஒருவர் பாட ஆரம்பிப்பார். மெல்ல இசைக்கருவிகளான சேமங்கலம், செண்டை மேளம் ஒலிக்க ஆரம்பிக்கும். திரைச்சீலையை விலக நாட்டிய நாடகம் துவங்கும். கதை கருவுக்கும் பாடலின் அர்த்தத்தின் உணர்ச்சிக்கும் ஏற்றாற்போல முகபாவனை உடல் மொழிகளை வெளிப்படுத்தி ஆடுவார்கள்.
ஸ்ரீவல்லப க்ஷேத்திரத்தில், கதகளிக்கு ஸ்ரீவல்லப சரித்திரம், ஸ்ரீவல்லப விஜயம், துகலாகர வதம், நளசரித்திரம், அர்ச்சுன காதை, சுதாமன் காதை உள்ளிட்ட சம்பவங்கள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.