அது என்ன குளிகை நேரம்? அந்த நேரத்தில் ஏன் காரியங்களைத் தொடங்கக்கூடாது?

நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு காலம், எமகண்டம் போன்றவற்றின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நிச்சயம் நீங்கள் குளிகை நேரம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.


சரி, குளிகை நேரம் என்றால் என்ன? யார் அந்த குளிகன். குளிகை நேரத்தில் நாம் எதை செய்யலாம்? எதை செய்யக்கூடாது? தினந்தோறும் வரும் குளிகை நேரம் எப்போது வரும். இப்படி பல தகவல்களை இங்கு பார்ப்போம்.

வாரத்தில் இருப்பது 7 நாட்கள். ஆனால் 9 நவக்கிரகங்கள் உள்ளன. 7 கிரகங்களுக்கு 7 நாட்கள் சென்று விடும். ஆனால் ராகு, கேதுவுக்கு கிழமை கிடையாது என்பதால், தினமும் 1½ மணி நேரம் ராகு காலம், எம கண்டமாக பிரித்துக் கொடுக்கப்படுகிறது. அது போலத் தான் குளிகனுக்கும் தினமும் 1½ மணி நேரம் பிரித்துக் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த குளிகை காலத்தில் செய்யும் செயல்கள், பெரும் வளர்ச்சி பெறும் என்பதால், அசுப காரியங்களை தவிர்த்து விடுவதுடன், வாழ்வில் திரும்பவும் நடைபெறவே கூடாத சுப நிகழ்வையும் இந்த நேரத்தில் செய்யக் கூடாது.

பகலில் ஒரு குழந்தை பிறந்தால் ‘குளிகன்’ என்றும், இரவில் ஒரு குழந்தை பிறந்தால் ‘மாந்தி’ என்றும் சொல்லப்படுகிறது. குளிகன் என்பவர் சனி மற்றும் ஜோஷ்டா தேவியின் புதல்வன்.

ஜாதக பலன் சொல்லும்போது, மாந்தியையும் அதாவது குளிகனையும் சேர்த்துச் சொல்ல வேண்டும் என ஜாதக நூல்கள் பரிந்துரைக்கின்றன. அதாவது நல்ல செயல்கள் செய்யும் போது குளிகை காலம் பார்க்கத் தேவையில்லை. தாராளமாக செய்யலாம். பிதுர் (முன்னோர் வழிபாடு) காரியங்கள் செய்யும் போது குளிகையில் செய்யக்கூடாது என்பார்கள்.

தினசரி குளிகை நேரங்கள் : குளிகை நேரம் : பகல்

ஞாயிறு : 03.00 - 04.30

திங்கள் : 01.30 - 03.00

செவ்வாய் : 12.00 - 01.30

புதன் : 10.30 - 12.00

வியாழன ; 09.00 - 10.30

வெள்ளி : 07.30 - 09.00

சனி : 06.00 - 07.30

தங்க நகையை பிடிக்காது என்று யாரும் இருக்க மாட்டார்கள். ஆண்களோ, பெண்களோ இன்றைக்கு அனைவருமே நகை அணிகின்றனர். தங்கம் ஆபரணம் என்பதை விட.  முதலீடு செய்ய ஏற்றது என்பதனாலேயே அனைவரும் தங்கம் வாங்குகின்றனர்.

தங்கம் வாங்க குளிகை காலம் ஏற்றது என்கின்றனர். குளிகை காலத்தில் நல்லது செய்தாலும் அது மீண்டும் மீண்டும் நடக்கும். எனவேதான் இந்த நாளில் நகை அடகு வைப்பதோ, விற்பதோ கூடாது என்கின்றனர்.

குளிகை நேரத்தில் ஒரு காரியத்தைத் தொடங்கினால், அது வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை. குளிகை என்ற நல்ல வேளையில் சொத்து வாங்குவது, சுப நிகழ்வுகள், கடனைத் திருப்பிக் கொடுப்பது, பிறந்தநாள் கொண்டாடுவது போன்றவற்றைச் செய்வதால், அவை எந்தத் தடையும் இல்லாமல் நடப்பது மட்டுமின்றி, இதுபோன்ற நல்ல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.

பெண் பார்க்கச் செல்வது, திருமணம் செய்தல், வேலைக்கு முயற்சி செய்வது, நேர்காணல்களை சந்திப்பது போன்றவற்றை குளிகை நேரத்தில் தவிர்க்க வேண்டும். அது போல் கடன் வாங்குவது, வீட்டை மாற்றுவது, சவ அடக்கம் போன்ற அசுப நிகழ்ச்சியை இதுபோன்ற நேரத்தில் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

அதே போல் நோய்க்கு மருத்துவரை அணுகுவதற்கும் இது சரியான நேரம் அல்ல. கொடிய நோய்க்கு முதன் முதலில் மருந்து எடுத்துக் கொள்ளவும் இந்த நேரம் சரியானது கிடையாது.

குளிகை நேரத்தில் ஒரு காரியத்தைச் செய்தால், அது எந்தத் தடையும் இல்லாமல் நடப்பதுடன், நல்ல நிகழ்ச்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். எனவே தொட்டதைத் துலங்கச் செய்யும் குளிகன் என்ற மாந்தியின் நேரத்தை பயன்படுத்தி காரிய விருத்தி, காரிய சித்தி பெறுங்கள்.