சைவ-வைணவ ஒற்று மையை வலியுறுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களை, மகா சிவராத்திரி அன்று ஓடிச் சென்றே வழிபடும் ‘சிவாலய ஓட்டம்’ பிரசித்தி பெற்றது.
அரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை உணர்த்திய சிவாலய ஓட்டம்
சுமார் 118 கிலோமீட்டர் தூரம் கொண்டது, சிவாலய ஓட்டம். சிவராத்திரி அன்று அதிகாலை 3 மணி அளவில் காவி வேட்டி, காவித்துண்டு, ருத்ராட்சம் அணிந்து, வெறுங்காலுடன் சிறிய பையில் விபூதி எடுத்துக்கொண்டு, பனை ஓலை விசிறியுடன் இந்த ஓட்டத்தை சிவ பக்தர்கள் தொடங்குவார்கள். 12 சிவாலயங்களில் முதல் ஆலயமான முஞ்சிறை என்ற திருமலையில் இருந்து இந்த ஓட்டம் தொடங்கும். 12-வது ஆலயமான திருநட்டாலம் ஆலயத்தை தரிசிக்கும் வரை சிவ நாமத்தை உச்சரித்தபடியே இந்த ஓட்டம் நடைபெறும்.
முஞ்சிறை திருமலை மகாதேவர் கோவில், திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு மகாதேவர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலாங்குடி மகாதேவர் கோவில், திருபன்னிபாகம் சிவன் கோவில், கல்குளம் நீலகண்ட சுவாமி கோவில், மேலாங்கோடு சிவன் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு சிவன்கோவில், திருபன்றிகோடு மகாதேவர் கோவில், திருநட்டாலம் சங்கர நாராயணர் கோவில்' ஆகியவை அந்த 12 ஆலயங்கள் ஆகும்.
பாண்டவர்களின் மூத்தவரான தருமர், ராஜ குரு யாகம் ஒன்றை நிறைவேற்றுவதற்கு, புருஷா மிருகத்தின் (வியாக்ரபாதர்) பால் தேவைப்பட்டது. அந்த ராட்சத மிருகத்துக்கு சிவன் மீது மிகுந்த பக்தியும், விஷ்ணு மீது மிகுந்த வெறுப்பும் உண்டு. வியாக்ரபாத மகரிஷிக்கு, சிவனும், விஷ்ணுவும் ஒன்று என உணர்த்த நினைத்தார், மகாவிஷ்ணு. அதன்படி பீமனிடம், புருஷா மிருகத்தின் பால் கொண்டுவர கட்டளையிட்டார். கூடவே 12 ருத்ராட்சங்களை பீமனின் கையில் கொடுத்தார். “உனக்கு ஏதாவது ஆபத்து வந்தால், இதில் ஒன்றை கீழே போட்டுவிடு” என்று சொல்லியும் அனுப்பினார்.
பீமன் புருஷா மிருகத்தை தேடி கானகம் வந்தான். அன்று மகாசிவராத்திரி நன்னாள். அங்கே புருஷா மிருகம் சிவ தவத்தில் முஞ்சிறை திருமலையில் சிவபூஜை செய்து கொண்டிருந்தது. அங்கு பீமன் சென்று, “கோபாலா.. கோவிந்தா...'' என்று கூறி புருஷா மிருகத்தை சுற்றி வந்தான். திருமாலின் திருநாமத்தைக் கேட்டதும், புருஷா மிருகம் மிகவும் கோபம் அடைந்து, பீமனை விரட்ட ஆரம்பித்தது. உடனே பீமன் அந்த இடத்தில் ஒரு ருத்ராட்சத்தைப் போட்டான். கீழே விழுந்த ருத்ராட்சம், ஒரு சிவலிங்கமாக மாறியது. இதைப் பார்த்ததும் புருஷா மிருகம் சிவலிங்க பூஜை செய்யத் தொடங்கி விட்டது.
சிறிது நேரம் கழித்து பீமன் மீண்டும், ‘கோவிந்தா, கோபாலா’ என குரல் எழுப்பி, பால் பெற முயன்றான். புருஷா மிருகம் மீண்டும் பீமனைப் பிடிக்க துரத்தியது. சிறிது தூரம் ஓடிய பீமன் மீண்டும் ஒரு ருத்ராட்சத்தை கீழே போட்டான். அதுவும் சிவலிங்கமாக மாறியது. அதைப் பார்த்து மீண்டும் புருஷா மிருகம் சிவ பூஜை செய்யத் தொடங்கியது.
இப்படியே 12 ருத்ராட்சங்களும் 12 சிவ தலங்களாக உருவாகி நின்றன. 12-வது ருத்ராட்சம் விழுந்த இடத்தில் ஈசனுடன் மகாவிஷ்ணு இணைந்து, சங்கர நாராயணனாக காட்சி தந்தனர். அதைக் கண்ட புருஷா மிருகம் அரியும், அரனும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்ந்து கொண்டது. கடைசி தலமான திருநட்டாலத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோலத்திலும் ஈசன் காட்சி தந்தார். அந்த மகிழ்ச்சியில் தருமரின் யாகத்திற்கு பால் கொடுக்க புருஷா மிருகம் ஒப்புக் கொண்டது. இதை மெய்ப்பிக்கும் வகையில் திருநட்டாலத்தில் இன்னும் இரண்டு ஆலயங்கள் உள்ளன. ஒன்றில் ஈசன், அர்த்தநாரீஸ்வரராகவும், மற்றொரு ஆலயத்தில் சங்கரநாராயணராகவும் அருள்பாலிக்கிறார். சிவாலய ஓட்டம் தொடர்பான திருக்கோவில்களின் தூண்கள், புருஷா மிருகம் மற்றும் பீமனின் சிற்பங்களை நாம் பார்க்க முடியும்.
மேற்கண்ட புராண நிகழ்வின் அடிப்படையில்தான் ஆண்டுதோறும் சிவராத்திரி நன்னாளில் அடியவர்கள் சிவாலய ஓட்டம் சென்று, வேண்டியதை பெறுகிறார்கள். சிவாலய ஓட்டத்தில் பங்கு கொள்ளும் அடியவர்களுக்கு ஆங்காங்கே மோர், பழரசம், பானகம், கிழங்கு, கஞ்சி போன்றவற்றைக் கொடுத்து பக்தர்கள் பலரும் மகேஸ்வர பூஜை செய்கிறார்கள்.
பீமன் ஒரே சிவராத்திரி நாளில் 12 சிவாலயங்களுக்கும் ஓடியதால், இந்த ஆலயங்கள் ‘சிவாலய ஓட்டத் தலங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஆலயங்களில் மகா சிவராத்திரி மட்டுமின்றி, மாதாந்திர சிவராத்திரி நாட்களிலும் சிவராத்திரி ஓட்டம் நடக்கிறது.
மற்றொரு கதை: சூண்டோதரன் என்ற அரக்கன் சிவன் மீது மிகுந்த பக்தி கொண்டவனாக இருந் தான். அவன் சிவனை வேண்டி திருமலையில் (முதல் சிவாலயம்) கடும் தவம் புரிந்தான். அவனது தவத்தை மெச்சிய சிவன் அரக்கன் முன் தோன்றி வேண்டிய வரம் தருவதாக கூறினார். உடனே அந்த அரக்கன், ‘நான் யாருடைய தலையை தொட்டாலும் அவன் சாம்பலாகி விட வேண்டும்’ என்ற வரத்தைக் கேட் டான்.
சிவனும் அந்த வரத்தைக் கொடுத்தார். உடனே அரக்கன் வரம் உண்மையிலேயே தனக்கு தரப்பட்டதா? என்பதை அறிய சிவனின் தலையை தொடமுயன்றான். உடனே, சிவன் அங்கிருந்து, ‘கோபாலா, கோவிந்தா’ என்று அழைத்தவாறு ஒவ்வொரு இடமாக ஓடி ஒளிகிறார். இறுதியில் நட்டாலத்தில் விஷ்ணு, மோகினி அவதாரம் எடுக்கிறார். மோகினியின் அழகில் மயங்கிய அரக்கனை அவன் கையால் அவனது தலையை தொடச் செய்து அழிக்கிறார், விஷ்ணு. இவ்வாறு சிவன் ஓடி ஒளிந்த 12 இடங்களில் சிவன் கோவில் எழுப்பப்பட்டதாகவும், நட்டாலத்தில் சிவனை விஷ்ணு காத்ததால் அங்கு இருவருக்கும் கோவில் எழுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு, சிவன் ஓடிய ஓட்டத்தை நினைவு கூறும் வகையில் தான் சிவாலய ஓட்டம் நடப்பதாக வரலாறு கூறுகிறது.