விவசாயிகளுக்கு மோடியும் ஸ்டாலினும் விரோதிகள்

காவிரி விவகாரத்தில் மோடி அரசும் ஸ்டாலின் அரசும் இணைந்து விவசாயிகளை மோசம் செய்வதாக அய்யாக்கண்ணு ஆவேசம் காட்டினார்.


காவிரி மேகதாட்டு அணை எதிர்ப்பு போராட்ட குழு சார்பில் தஞ்சாவூர் கீழ்க்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முற்றுகையிட்டு விவசாயிகள் ஆயிரக்கணக்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த பேரணியை துவக்கி வைத்து பேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவரும் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளருமான அய்யாக்கண்ணு, ‘’காவிரி கர்நாடகம் தண்ணீர் விட மறுக்கிறது மேகதாட்டு அணைக்கட்டி தமிழ்நாட்டை அழிக்க பார்க்கிறது.தமிழ்நாடு அரசு மோடி அரசும் இதனை தட்டிக் கேட்க தயங்குகிறார்கள். தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுத்து வறட்சி ஏற்பட்டால் பாதிப்புக்கு பல கோடி ரூபாய் இழப்பீடாக கர்நாடகா தமிழ்நாட்டிற்கு தர வேண்டும் என்று நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டிருக்கிறது ஆனால் தமிழ்நாடு அரசு அதைக் கேட்டு பெறுவதற்கான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

மோடி அரசாங்கம் 24 லட்சம் கோடியை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்கிறது. ஆனால் வறட்சியால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சுமார் ஒரு லட்சம் கோடி அளவில் விவசாய கடன் தள்ளுபடி செய்ய மறுக்கிறது. விவசாயிகளுக்கு விரோதமான ஆட்சியாக மோடியும், ஸ்டாலினும் செயல்படுகிறார்கள்.

மேகதாட்டு அணைக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ஸ்டாலின் அரசு தவறுவதால் எதிர்த்து விவசாயிகள் ம போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

மோடி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் அவர் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் சார்பில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளோம்.அதற்காக தேர்தல் ஆணையத்தில் அனுமதி பெற்றுள்ளோம் என கூறினார்.