ராகுல் காந்தியுடன் விவாதம் செய்ய மோடி வருவாரா..?

பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதை, பத்திரிகையாளர் என்.ராம், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி.லோக்கூர், ஓய்வு பெற்ற டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அஜீத் பி.ஷா ஆகியோர் அனுப்பியுள்ளனர்.


அமெரிக்காவின் தேர்தல் களத்தில் அதிபர் பதவிக்குப் போட்டியிடும் இரண்டு பேரும் நேரடியாக ஒரு பொது நிகழ்வில் கலந்துகொண்டு தங்களுக்கு வாக்களிக்க வேண்டிய அவசியத்தை முன் வைப்பார்கள். அப்போது ஒருவர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு மற்றவர் பதில் அளிப்பார். இதை பார்க்கும் மக்கள் இருவரில் யார் உண்மை பேசுகிறார், தெளிவாக இருக்கிறார் என்பதை ஆய்வு செய்து வாக்களிப்பார்கள்.

அப்படியொரு பொதுவிவாதம் இந்தியாவிலும் நடைபெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதை, பத்திரிகையாளர் என்.ராம், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி.லோக்கூர், ஓய்வு பெற்ற டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அஜீத் பி.ஷா ஆகியோர் அனுப்பியுள்ளனர்.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றி விடுவார்கள் என்ற வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புகார் கூறி வருகிறார். அதேபோல், காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் இடஒதுக்கீடுகள் அனைத்தையும் முஸ்லிம்களுக்கு ஒதுக்குவார்கள் என்றும், அயோத்தியின் ராமர் கோயில் தீர்ப்பை மாற்றி எழுதி விடுவார்கள் என்றும் பிரதமர் மோடி புகார் கூறியுள்ளார்.

இந்த புகார்களுக்கு விளக்கம் அறியும் வகையிலும், பொதுமக்கள் சார்பிலான மேலும் பல கேள்விகளுடன் விவாதம் செய்ய இரண்டு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவாதமானது எந்த சார்பும் இல்லாத வகையிலும், லாபநோக்கம் இல்லாத மேடையில் நடத்தவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இடஒதுக்கீடு, அரசியலமைப்பின் சட்டப் பிரிவு 370 மற்றும் சொத்துகளின் மறுபங்கீடு ஆகிய விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்க காங்கிரஸுக்கு பொதுவெளியில் பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுதல், தேர்தல் பத்திரங்கள், சீனாவின் நடவடிக்கைகளுக்கான மத்திய அரசின் பதில் நடவடிக்கை ஆகியவை மீது பிரதமர் மோடியிடம் பதில்களை கேட்டதுடன் அவரை பொது விவாதத்துக்கும் அழைத்துள்ளார்.

இந்த விவாதத்தில் கலந்துகொள்ள இருவராலும் முடியாவிட்டால் அவர்கள் சார்பில் ஒருவரை அனுப்பி வைக்கும்படியும் மூவரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேரில் சந்தித்து புகார்களுக்கு விளக்கம் அளிக்கும் தைரியமும் நேர்மையும் தலைவர்களுக்கு இருக்கிறதா என்பதை மக்கள் அறிவதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள்.

டெலிபிராம்ப்டரில் பேசிவரும் மோடி இதுவரை ஒரே ஒரு முறை கூட பத்திரிகையாளர்களை சந்தித்தது இல்லை. ஆகவே, ராகுல் ஒப்புக்கொண்டாலும் மோடி ஒப்புக்கொள்ள வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.