நள்ளிரவில் காவல் புரியும் இந்த காவல் தெய்வம் உருவான கதை தெரியுமா?

முனியாண்டி, முனி, முனீஸ்வரர் என்றெல்லாம் அழைக்கப்படும் காவல் தெய்வம் ஏராளமான கிராம ஆலயங்களில் அருள்புரிந்து வருவதைக் காணலாம்.


இந்தத் திருநாமங்கள் அனைத்தும் ஒரே வடிவத்தைத்தான் குறிக்கின்றன. பெரும்பாலும் ‘முனீஸ்வரர்’ என்ற திருநாமமே பல கிராமங்களில் வழங்கப்பட்டு வரும் பொதுப் பெயராக இருக்கும்.

சிவபெருமானை ஈஸ்வரன் என்று அழைப்பார்கள்.சிவனுக்கு பிறகு இரண்டு பேருக்கு மட்டுமே ஈஸ்வரன் பட்டம் கிடைத்திருக்கிறது. அதில் ஒருவர் தர்மத்தை காக்கும் சனீஸ்வரன். மற்றொருவர் முனிஸ்வரன் ஆவர். இந்த முனீஸ்வரன் சிவபெருமானின் காவலர்களில ஒருவர் ஆவார். முனீஸ்வரன் கிராமங்களில் அதிகமாக கோவில் கொண்டிருக்கிறார். அவர் கிராமங்களை இரவு நேரங்களில் காத்து, துஷ்ட சக்திகளை அடியோடு ஒழித்துக் கட்டுவார் என நம்பப்படுகிறது. அந்த முனீஸ்வரன் அவதரித்த வரலாற்றை பற்றி கொஞ்சம் பார்ப்போம்,

முன்னொரு காலத்தில் அந்தகாசுரன் என்னும் அசுரன் தேவர்களையும், மக்களையும்வதைத்து இடையூறு செய்து வந்தான். அந்த அசுரனிடம் இருந்து தங்களைக் காக்கும்படி அன்னை பராசக்தியை அனைவரும் வேண்டினர். பார்வதி அம்மன் காத்தாயி என்ற பெயரில் பூமியில் அவதரித்தார். அசுரனை அழிக்க காத்தாயி அம்மன் லாடமுனி, முத்துமுனி, செம்முனி, கருமுனி, கும்பமுனி, வால் முனி, சட்டை முனி என்று ஏழு முனிகளை உருவாக்கினார். அவர்கள் அனைவரும் சேர்ந்து அந்தகாசுரனை அடக்கி வதம் செய்தார்கள். பின்னர் முனிகள் அனைவரும் ஒரே வடிவமாக கலியுகத்தில் மக்களை காப்பதற்காக பூமிக்கு வந்தனர். இவர்களின் அம்சமாக விளங்குபவரே முனியப்பன் ஆவார்.

முனீஸ்வரன் கண்கள் நெருப்பு போல பிரகாசிக்கும், கனல் கக்கும் கண்களும், அருள் ஒளிரும் மேனியும், கொண்டவராக முனியப்பன் விளங்குகின்றார். முனீஸ்வரன் அருள் கிடைத்தால் சகல சவுபாக்கியங்களும் கிட்டும் என நம்பப்படுகிறது. முனீஸ்வரன் நள்ளிரவு 12 மணிக்கு மேல் 5 மணிக்குள் சுமார் 20 அடி உயரத்திற்கு வெண் புகைவடிவில் வலம் வருவார் என சொல்லபடுகிறது. இன்றும் பல கிராமங்களில் கிராம தெய்வமாக முனியப்பன் உள்ளார். பலருக்கு முனியப்பன் குல தெய்வமாவார். பல்வேறு பெயர்களில் இவர் கிராமங்களில் அழைக்கபடுகிறார்.

நீண்ட தூர பயணம் புறப்படுபவர்கள் தங்களுடைய வாகனங்களுடன் முனியப்பனை வணங்கிய பிறகே தங்களின் பயணத்தை ஆரம்பிப்பார்கள். இந்த வழக்கத்தை இன்றும் கூட கிராமங்கள் மட்டுமல்லாது நகரங்களிலும் காணலாம். இதற்க்கு காரணம் முனியை வணங்கிவிட்டு புறப்பட்டால் அந்த பயணத்தில் நமக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாமல் நம்மை காப்பார் என நம்பிக்கையேயாகும்.

பர்மா என்று அழைக்கப்பட்ட நாடு இப்போது மியான்மர். சுதந்திரத்துக்கு முன் இங்கே இடம் பெயர்ந்த தமிழர்கள் லட்சக்கணக்கில் வசித்து வருகிறார்கள். ரங்கூன் என்று அப்போது அழைக்கப்பட்டது இப்போது யாங்கூன் என்று அழைக்கப்படுகிறது. யாங்கூனில் இருந்து சுமார் ஒரு மணி நேரப் பயணத்தில் வருகிற ஊர்-பீலிக்கான். இங்கே முனீஸ்வரருக்கு அற்புதமான ஓர் ஆலயம் அமைந்துள்ளது.

உலகில் உள்ள முனீஸ்வரன் ஆலயங்களுள் இந்த ஆலயம், மிகச் சிறப்பான நிலையில் இருந்து வருவது பாராட்ட வேண்டிய விஷயம். தற்போது ஒரு சூலமே இங்கு முனீஸ்வரராக வணங்கப்பட்டு வருகிறது. 2011 ஏப்ரலில் இந்த ஆலயத்துக்கு நடந்த கும்பாபிஷேகத்தில் சுமார் ஐந்து லட்சம் மக்கள் கலந்து கொண்டார்கள் என்பது பிரமிக்கக் கூடிய தகவல் (கும்பாபிஷேகத்தின் போதுதான் இந்த ஆலயத்தில் முனீஸ்வரருக்கு விக்கிரகம் பிரதிஷ்டை ஆனது). 

இங்கு அரச மரத்தடியில் பிரதிஷ்டை ஆகி இருக்கும் ஒரு சூலத்தையே முனீஸ்வரராக நினைத்து மக்கள் வணங்கி வருகிறார்கள். நீதி, நியாயம் இவற்றை மக்களுக்கு வழங்கி வருவதால் இவரை ‘ஜட்ஜ் ஐயா’ என்று அந்தத் தேசத்து மக்கள் அழைக்கிறார்கள். எத்தகைய வழக்குகள் இழுபறியில் இருந்தாலும், அதற்குரிய தஸ்தாவேஜுகளை இவரது காலடியில் வைத்து வணங்கினால், ஒரு வார காலத்துக்குள் தீர்வு கிடைத்து விடுவது அவரது அருளில்தான் என்று சொல்லவேண்டும்.