கடந்த 2018ம் ஆண்டு மட்டும் இந்தியர்கள் சுமார் ஒரு கோடி பேர் வேலை இழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே வருடத்தில் ஒரு கோடி இந்தியர்கள் வேலை இழந்தனர்! காரணம் என்ன தெரியுமா?
இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் என்கிற அமைப்பு ஆண்டு
தோறும் இந்தியாவில் வேலை பெறுபவர்கள் மற்றும் வேலை இழப்பவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு
வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு இந்தியாவில் வேலை பெற்றவர்கள் மற்றும்
வேலை இழந்தவர்களின் எண்ணிக்கையை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
அந்த அமைப்பின் அறிக்கையில்
கூறப்பட்டுள்ளதாவது- கடந்த 2017ம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் வேலையில் இருந்தவர்களின்
எண்ணிக்கை கிட்டத்தட்ட 40 கோடி ஆகும். ஆனால் கடந்த 2018 இறுதியில் எடுத்த கணக்கெடுப்பின்
படி இந்தியாவில் வேலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 39 கோடி மட்டுமே ஆகும். ஒரே ஆண்டில்
சுமார் ஒரு கோடி பேர் வரை தங்களின் வேலையை இழந்துள்ளனர்.
நகர்புற மற்றும்
கிராமப்புறங்களை சேர்ந்த பெண்கள் தான் அதிக அளவில் தங்கள் வேலையை இழந்துள்ளனர். அதிலும்
விவசாயம் சார்ந்த தொழில்கள் தொடர்புடைய பணிகளில் இருந்தவர்களுக்கு தான் அதிகம் வேலை
இல்லாமல் போயுள்ளது. கிராமப்புறங்களை சேர்ந்த 90 லட்சம் பேரும், நகர்புறங்களை சேர்ந்த
ஒரு லட்சம் பேரும் தங்கள் வேலையை கடந்த 2018ம் ஆண்டு இழந்துள்ளனர். ஒரு கோடி பேர் வேலை
இழந்தாலும் அவர்களில் 88 லட்சம் பேர் பெண்கள் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது. நகர்புறங்களை
சேர்ந்த பெண்களில் சுமார் 28 லட்சம் பேர் தங்கள் வேலையை கடந்த ஆண்டு இழந்து தவிக்கின்றனர்.
40 முதல் 59 வயது
வரையிலான பணியாளர்கள் தங்கள் வேலையில் எந்த பிரச்சனையும் இல்லாமல் கடந்த ஆண்டு தொடர்ந்துள்ளனர்.
ஆனால் அதற்கு பிந்தையை வயதுடையவர்கள் மற்றும் முந்தைய வயதுடையவர்கள் அதிக அளவில் வேலைகளை
இழந்துள்ளனர்.கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவில் வேலை இல்லாதவர்களின் சதவீதம் ஏழு புள்ளி
நான்கு சதவீதமாக இருந்துள்ளது.
கடந்த நவம்பரில்
6 புள்ளி 6ஆக இருந்த வேலையற்றவர்களின் சதவீதம் டிசம்பரில் ஒரு விழுக்காடு அளவிற்கு
உயர்ந்து ஏழு புள்ளி நான்காக உயர்ந்துள்ளது. இந்தியர்கள் ஒரே ஆண்டில் ஒரு கோடி போர்
வேலை இழக்க ஜி.எஸ்.டி வரிமுறை காரணம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இதே போல்
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தற்போது வரை தொழில் நிறுவனங்களால் மீண்டும் வர முடியவில்லை
என்றும் அந்த கட்சி கூறியுள்ளது.
ஜி.எஸ்.டி அமல் மற்றும்
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கமே இந்தியாவில் வேலை அற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க
காரணம் என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.