தேர்தல் தேதி ஒருபக்கம் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், வாக்காளர்களிடையே திமுகவுக்கு சேதாரத்தை ஏற்படுத்தும் விதமாக தொடரும் நிகழ்வுகள், அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆபாச ராசா... பணம் கொடுக்கும் நேரு... அம்பலமாகும் தி.மு.க.வின் தில்லுமுல்லுகள்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்த திமுக எம்.பி ஆ.ராசா பேசிய ஆபாச பேச்சு சர்ச்சை ஓய்வதற்குள், தபால் ஓட்டு அளிக்க காவலர்களுக்கு பணம் வழங்கியதாக தி.மு.க சீனியர் கே.என். நேரு மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு அடுத்த அதிர்வை ஏற்படுத்தியது.
திருச்சி மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு தபால் ஓட்டு அளிக்க காவலர்களுக்கு பணம் வழங்கியதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கை விசாரித்து வந்தனர். பணம் பெற்றதாக கூறப்படும் காவலர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், இதில் அடுத்தக்கட்ட திருப்பமாக இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதிர்ச்சி அத்துடன் நிற்கவில்லை. தற்போது ஆபாச பேச்சு தொடர்பாக ஆ.ராசா அனுப்பிய விளக்கத்தை ஏற்க மறுத்துள்ள தேர்தல் ஆணையம், அவர் 2 நாட்களுக்கு பிரசாரம் செய்ய தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அத்துடன் திமுகவின் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்தும் ஆ.ராசாவின் பெயரை நீக்கி உத்தரவிட்டுள்ளது.
வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 தினங்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை குறித்த செய்தி மீண்டும் ஊடகங்களில் தலைப்புச் செய்தி ஆனதில், திமுகவின் பெயர் டோட்டல் டேமேஜ் ஆகிவிட்டதாக உடன்பிறப்புகள் புலம்பத்தொடங்கி விட்டனர். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் திமுகவுக்கு எதிரான கருத்துகள் தெறித்து விழுவதால், அறிவாலயம் அதிர்ந்து போய் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.