என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 30
இட்லி விற்கத் தான் படிச்சுட்டு வந்திருக்கோமா..?
பெருந்தலைவர் காமராஜருக்கு மதிய உணவுத் திட்டம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு சத்துணவுத் திட்டம் போன்று புரட்சித்தலைவிக்கு மலிவு விலை உணவகம் (அம்மா உணவகம் என்ற பெயர் பின்னர் சூட்டப்பட்டது) அமையும், என்று பெருநகர சென்னை மேயர் சைதை துரைசாமி விளக்கமாக எடுத்துச் சொன்னதும் அன்றைய முதல்வர் ஜெயலலிதா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
தமிழகம் முழுக்க 1,000 உணவகம் தொடங்குவோம். முதல் கட்டமாக சென்னையின் 200 வார்டுகளிலும் ஒரே நேரத்தில் மலிவு விலை உணவகம் தொடங்கிவிடலாம் என்று அனுமதி கொடுத்தார்.
முதல்வர் ஜெயலலிதா ஆணைப்படி மலிவு விலை உணவகம் பற்றிய அறிவிப்பை மாநகரப் பட்ஜெட்டில் அறிவித்தார். முதல்வருக்கு விருப்பமான திட்டம் என்பதால் உடனடியாக நடைமுறைக்கு வந்துவிடும் என்று சைதை துரைசாமி எதிர்பார்த்தார். ஆனால் அதிகாரிகள் தாமாக முன்வந்து இதற்கான நடவடிக்கை எதுவும் எடுப்பதாகத் தெரியவில்லை.
எனவே, தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரையும் தானே நேரில் சந்தித்து இந்தத் திட்டம் குறித்துப் பேசினார். எல்லோரும், ‘விரைவில் கொண்டுவருவோம்’ என்று உறுதி அளித்தார்களே தவிர, அதற்கான பணி எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை.
தொடர்ந்து சைதை துரைசாமியின் அலைச்சலைப் பார்த்த அதிகாரி ஒருவர், ‘மலிவு விலையில் ஆயிரம் இடத்துல உணவகம் நடத்துறதுன்னா எவ்வளவு செலவு வரும், அதுக்கு எத்தனை ஆட்கள் தேவைப்படும், அதுக்கெல்லாம் பணம் எங்கிருந்து வரும்? நாங்க இட்லி விற்கிறதுக்குத் தான் படிச்சுட்டு வந்திருக்கோமா.. இதை எல்லாம் கணக்குப் பார்த்து திட்டத்தைக் கொண்டுவரணும், லேட் ஆகத்தான் செய்யும். அவசரப்படுத்தாதீங்க’ என்று நேரடியாகவே சொல்லிவிட்டார்.
இனியும் அமைதியாக இருந்தால் இந்த திட்டத்தைக் கொண்டுவர முடியாது என்று நினைத்த சைதை துரைசாமி உடனடியாக அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கினார். மலிவு விலை உணவகம் எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு பக்காவாக ஒரு புளூபிரிண்ட் தயார் செய்யத் தொடங்கினார்.
- நாளை பார்க்கலாம்.