சிவபெருமானைப் போல் நாகத்தை ஆபரணமாக அணிந்த பாம்பாட்டி சித்தர்

பாம்பாட்டி சித்தர் பதினெண் சித்தர்களுள் ஒருவர் ஆவார். பாம்பாட்டி சித்தரின் காலம் கி.பி 1200 ஆகும். இவர் கார்த்திகை மாதம் மிருகசீரிசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்.


இவரது குரு சாட்டைமுனி ஆவார். படையையே நடுங்கச் செய்யும் பாம்பினை ஆட்டி வைப்பவர் என்பதால் இப்பெயர் அமைந்தது. பாம்பைப் பிடிப்பது அவற்றின் விஷத்தை சேமித்து விற்பது. இதுவே பாம்பாட்டி சித்தரின் தொழில். இவர் விஷமுறிவு மூலிகைகளைப் பற்றி அறிந்திருந்ததால் அந்த ஊரில் பாம்புக்கடிக்கு சிறந்த வைத்தியராகத் திகழ்ந்தார்.

ஒருநாள் சிலர், மருத மலையின் மீது பெரிய நவரத்ன பாம்பு ஒன்று இருப்பதாகவும், அதன் தலையில் விலையுயர்ந்த மாணிக்கம் இருப்பதாகவும், அதனைப் பிடிப்பவன் திறனுள்ள பெரிய பாக்கியசாலி என்றும் பேசினார். இதனைக் கேள்விப்பட்ட பாம்பாட்டி சித்தர் அதனைப் பிடிக்க விரும்பி காட்டிற்குள் சென்றார். பாம்பைத் தீவிரமாக தேடினார். அப்போது திடீரென பலத்த சிரிப்பொலி கேட்டுத் திரும்பினார். அங்கே மிகப் பிரகாசமான ஒளியோடு சாட்டைமுனி சித்தர் நின்றார். ″இங்கு எதைத் தேடுகிறீர்கள்?″ என்று வினவினார். அதற்கு பாம்பாட்டி சித்தர் ″நான் நவரத்ன பாம்பைப் பிடிக்க வந்தேன், அதைக் காணவில்லை″ என்றார். இதைக் கேட்ட சாட்டைமுனி சிரித்தார். ″நவரத்ன பாம்பை உனக்குள் நீயே வைத்துக் கொண்டு வெளியே தேடுகின்றாயே! இது பயனற்ற செயல் அல்லவா! மிகுந்த உல்லாசத்தைத் தரக்கூடிய ஓர் பாம்பு எல்லோர் உடலிலும் உண்டு, ஆனால் யாரும் அதை அறிவதில்லை. அதனால் வெளியில் திரியும் இந்தப் பாம்பை தேடுவதை விட்டுவிட்டு, இல்லாத பாம்பைத் தேடி ஓடாதே″ என்றார். எல்லாவற்றையும் கேட்டு உண்மையை உணர்ந்த பாம்பாட்டியார் சித்தரின் காலில் விழுந்து வணங்கினார். சித்தர் அருள்புரிந்து விட்டு மறைந்தார்.

இந்திய தாந்த்ரீக மரபில் பாம்பு என்பது குண்டலினி சக்தியின் குறியீடு. சிவனின் ஆபரணமாக பாம்பு இருப்பதே அதன் வெளிப்பாடு என்கின்றனர் சைவ சமய ஆய்வாளர்கள். பதினெட்டு சித்தர்களில் பாம்பாட்டிச் சித்தர் ஒருவர் மட்டுமே சிவனைப்போன்று நாகத்தை ஆபரணமாக அணிந்தவர்.

கோயம்பத்தூர் அருகில் உள்ள மருதமலை ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோவில் வளாகத்தில் மூலவர்க்கு சற்று தூரம் தள்ளி படிக்கட்டில் இருந்து கீழே சென்றால் பாம்பாட்டி சித்தர் கோவில் அமைந்துள்ளது. இந்த இடத்தை பாம்பாட்டி சித்தரின் குகை என்றும் ஜீவசமாதி என்றும் கூறப்படுகிறது. பாம்பாட்டி சித்தர்க்கு முருகப்பெருமான் மருதமலையில் மருதமரத்தடியில் பெருகும் மருததீர்த்தம் அளித்து சர்ப்ப ரூபத்தில் காட்சி கொடுத்ததாக வரலாறுகள் உண்டு. மருதமலை முருகர் சன்னதியிலிருந்து சித்தர்குகைக்கு வழி உள்ளதாகவும், அதன் வழியே பாம்பாட்டி தினமும் முருகப்பெருமானை தரிசிப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றது.

இவரது படைப்புகள் பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள், சித்தராரூடம், பாம்பாட்டி சித்தர் வைத்திய சாத்திரம் ஆகியனவாகும். பாம்பாட்டி சித்தர் பாம்பு பிடித்து அதை ஆட்டிவைப்பது, அதோடு விளையாடுவது, இவற்றில் எல்லாம் அதிசிறந்தவராகத் திகழ்ந்தார். வாழ்வின் நிலையாமை, உடலின் தன்மை, உறவின் தன்மை, உலகமாயை, நிலையானவை எவை, நிலையற்றவை எவை என்று பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளார்.

பாம்பாட்டி சித்தர் 123 வருடங்கள் 32 நாட்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இவர் மருதமலையில் சித்தியடைந்ததாகச் சிலரும், துவாரகையில் சித்தியடைந்ததாகச் சிலரும், விருத்தாச்சலத்தில் சித்தியடைந்ததாகச் சிலரும் கூறுகின்றனர். இருப்பினும், மூன்று இடங்களிலும் இவரது நினைவிடம் உள்ளது.