சிவனுக்கே தோஷம் நீக்கிய அம்மன்... அங்காளம்மன் தரிசன மகிமை!

ஒரு சமயம் சிவபெருமானுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தினை நீக்கவும் அகில உயிர்களுக்கு அருள் புரியவும் அங்காளம்மன் என்ற திருப்பெயரோடு தோன்றினாள் ஆதிபராசக்தி.


அதே பெயரில் திருக்கோயில் கொண்டுள்ள தலங்கள் அநேகம். அவ்வகையில் பந்தநல்லூர் தலத்தில் வடக்கு நோக்கி கோயில் கொண்டுள்ளாள் அங்காளம்மன். ஆலயத்தை வலம் வருவதற்கு முன் பிறைசூடரான ஈசனை பிரம்மஹத்தி பிடித்தது ஏன்? அதை அம்பிகை எவ்வாறு போக்கினாள் என்ற புராணக் கதையை பார்த்துவிடுவோம். அன்னை பராசக்தியின் தந்தையான தட்சன் மகா ஆற்றல் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு யாகம் வளர்த்தான்.

ஆனால் மருமகனான பரமசிவனை அதற்கு அழைக்காமல் அலட்சியப்படுத்தினான். தன் தந்தையின் தவறை சுட்டிக்காட்டினாள் தாட்சாயினியான அம்பிகை. ஆனாலும் தட்சன் கேட்கவில்லை. அதனால் ஆவேசப்பட்ட தாட்சாயினி அந்த யாக நெருப்பில் இறங்கினாள். அவளது திருவுடலைச் சுமந்த பரமசிவன் ஆவேச நடனமாடினார். தன் பூதவுடலை விட்டதாக எண்ணி மீண்டும் பரமசிவனிடம் சேர வரதராஜனுக்கு மகளாக பிறந்தாள். பார்வதியாகி பரமசிவனை மணந்தாள். அவள்தான் அங்காளம்மன்.

இன்னொரு புராணக் கதையும் உண்டு. ஆதிகாலத்தில் பிரம்மனுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. அதனால் தனக்கும் ஈசனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்ற கர்வத்தோடு கூறிக் கொண்டு வலம் வந்தார் பிரம்மா. சந்தோபி, சுந்தரர் என்ற அரக்கர்களின் கொடுமையிலிருந்து தேவர்களை காக்க ஒரு மாபெரும் வேள்வியை நடத்த தீர்மானித்த பிரம்மா அதற்கு சிவபெருமானை அழைக்க அதிவேகமாக கயிலைக்குச் சென்றார். எதிர்பாராதவிதமாக 5 தலைகளோடு வந்த பிரம்மாவைக் கண்ட பார்வதி அவசரத்தில் பரமசிவன் என்று எண்ணி வணங்கி விட்டாள். பிறகுதான் உண்மை புரிந்தது பார்வதிக்கு, 5 தலையால் ஏற்பட்ட குழப்பம் இது என்பது.

அன்னை அதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும் பிரம்மா ஆதிசக்தியே என்னை அடி பணிந்து வணங்கினாள் என்று அகந்தையோடு அதை கூறிக் கொள்ளத் தொடங்கினார். அஞ்சு தலையால் வந்த இந்த குழப்பத்தை பரமசிவனிடம் பார்வதி கூற சிவன் சினந்தார். பிரம்மாவின் ஒரு தலையைக் கொய்தார். ஆனால் தலையை கொய்ய கொய்ய தலை மீண்டும் முளைத்துக் கொண்டே இருந்தது. 999 தலைகள் வந்ததும் சிவபெருமான் அவற்றை மாலையாகக் தரித்துக் கொண்டார்.

ஆயிரமாவது தலையை அவர் கொய்தபோது அது சிவபெருமான் கையிலிருந்து கீழே விழாமல் இறுக்கிப் பிடித்துக்கொண்டது. அந்த தோஷத்தின் காரணமாக உலகுக்கே படியளக்கும் ஈசனுக்கு பசி எடுக்கத் தொடங்கியது. ஆனால் அவர் பெறும் உணவை எல்லாம் பிரம்ம கபாலமே விழுங்கியது. என்ன செய்வது என்று புரியவில்லை பரமசிவனுக்கு. அவருக்கு ஒரு யோசனை சொன்னாள் இலக்குமி.

பரமசிவன் அன்னம் நாடி கபாலத்துடன் வந்த போது நல்ல சுவையான உணவை இரண்டு முறை கபாலத்தில் போட்டாள் பார்வதி. மூன்றாவது முறை கபாலத்தில் போடுவது போல் போக்கு காட்டி கீழே போட்டாள். உணவு கீழே கொட்டி விட்டதே என்று கபாலம் கீழே இறங்கியது. அதனை பார்வதி தன் காலால் மிதித்து பாதாளத்தில் அழுத்தினாள். கபாலம் அழிந்தது. பிரம்மஹத்தியைப் போகும்போதும் கபாலத்தை அழிக்கும்போதும் பார்வதிதேவி அங்காளம்மன் ஆக விளங்கினாள்.

இந்த அங்காளம்மன் ஆலயத்தின் முன் அழகிய மண்டபம் உள்ளது. அடுத்துள்ள மகாமண்டப நுழை வாயிலில் இருபுறமும் துவார பாலகர்களின் ஓவியங்கள் உள்ளன. உள்ளே இறைவியின் முன் நந்தி, பலிபீடம் இருக்க மண்டபத்தில் இடதுபுறம் பைரவர், விஷ்ணு, இருளன், காட்டேரி, மதுரைவீரன், பாவாடைராயன், மாயாண்டி, புத்திரர் ஆகியோரும், அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவாயிலின் இடதுபுறம் விநாயகரும் அருள்பாலிக்கிறார்கள்.

கருவறையில் அன்னை அங்காளம்மன் அமர்ந்த கோலத்தில் புன்னகை தவழ அருள்பாலிக்கிறாள். தன்னை நாடி வரும் பெண்களின் வாழ்வில் மாங்கல்ய பேறு கிடைப்பதில் தாமதம், தம்பதியரிடையே பிரச்சனை, தாய் ஆவதில் தாமதம் என்று ஏற்படக்கூடிய பல்வேறு குறைகளையும் தீர்த்து அவர்கள் மனம் குளிரும் வண்ணம் அனைத்து வேண்டுதல்களையும் ஈடேற்றி அருள் புரிவதில் அன்னை அங்காளம்மனுக்கு நிகரில்லை என்று பலன் பெற்ற பக்தைகள் சொல்கிறார்கள்.

சுமார் 100 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த ஆலயத்தில் அருள் பாலிக்கும் அன்னை அங்காளம்மன் இப்பகுதியில் பலருக்கு குலதெய்வமாகவும் விளங்குகிறாள்.