மேடம் குழந்தை தலை வெளிய தெரியுது..! கதறிய உறவுகள்..! கண்டு கொள்ளாத செவிலியர்கள்! துடியாய் துடித்த கர்ப்பிணி பரிதாவுக்கு நேர்ந்த விபரீதம்!

குழந்தை பிறந்த அடுத்த சில நிமிடங்களிலேயே இளம்பெண் மூச்சுத் திணறல் ஏற்பட்டு செவிலியர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த சம்பவம் திருப்பத்தூர் மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பத்தூர் டவுன் பகுதியில் ஆரிப் நகரில் இம்ரான் வசித்து வருகிறார். 27 வயதான இவருக்கு 23 வயதில் பரிதா என்ற மனைவியும், முகமது என்ற 3 வயது குழந்தையும் உள்ளது. இந்நிலையில் பரிதா இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆகியுள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டதால் அருகிலிருந்த திருப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டதை அறிந்த அவரது உறவினர்கள் செவிலியர்களிடம் கூறியிருக்கின்றனர். அதற்கு செவிலியர்கள் மருத்துவர்கள் யாரும் இல்லை . போய் காத்திருங்கள் வந்து பார்க்கிறோம் என்று அலட்சியமாக பதில் கூறியுள்ளனர். பின்னர் அதிக வலியின் காரணமாக குழந்தையின் தலைப்பகுதி வெளியே வர ஆரம்பித்ததை அறிந்து பதறிய அவரது உறவினர்கள் செவிலியரிடம் கூறினர். அப்போது பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அவருக்கு பிரசவம் பார்த்தனர். இதனால் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பரிதாவிற்கு மூச்சு திணறல் ஏற்பட்டதை அறிந்த அவரது உறவினர்கள் செவிலியர்களிடம் கூறியுள்ளனர். அந்த நேரத்தில் செவிலியர்கள் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்ததாகவும் சாப்பிட்டு விட்டு வருகிறோம் என்று அலட்சியமாக பதில் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் பரீதா மூச்சுத்திணறல் அதிகமாகி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் கோபமடைந்த பரிதாவின் உறவினர்கள் மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்காததாலும், செவிலியர்களின் அலட்சியத்தாலும் பரிதா உயிரிழந்துவிட்டார் என மருத்துவமனை வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அவர்களது போராட்டம் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.