ராகுல் காந்திக்கு ரேபரேலியில் சபாஷ் சரியான போட்டி

கேரளாவின் வயநாட்டில் போட்டியிட்டுள்ள ராகுல் காந்தி, பா.ஜ.க.வின் சவாலை ஏற்று உத்தரப்பிரதேசம் ரேபரேலியிலும் போட்டியிடுகிறார். அம்மாவின் தொகுதியில் கடுமையான போட்டி இருக்கிறது என்கிறார்கள்.


கேரளாவின் வயநாட்டில் போட்டியிட்டுள்ள ராகுல் காந்தி, பா.ஜ.க.வின் சவாலை ஏற்று உத்தரப்பிரதேசம் ரேபரேலியிலும் போட்டியிடுகிறார். அம்மாவின் தொகுதியில் கடுமையான போட்டி இருக்கிறது என்கிறார்கள்.

ராகுலை எதிர்த்து பாஜக சார்பில் ரேபரேலியில் தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார். இவர் 2019-ல் சோனியா காந்தியிடம் தோல்விஅடைந்தார். என்றாலும் சோனியாவின் வாக்குகளை குறைத்திருந்தார். இதற்காக பாஜக தினேஷுக்கு உ.பி. மாநில மேலவையில் எம்.எல்.சி. பதவி அளித்ததுடன் மாநில அமைச்சராகவும் நியமித்தது.

இந்த செல்வாக்கில் தினேஷ், தொடர்ந்து ஸ்மிருதியை போல் ரேபரேலி மக்களுடன் தங்கிப் பணி செய்துவந்தார். மேலும், 2018 வரை காங்கிரஸில் சோனியாவுக்கு நெருக்கமானத் தலைவராக தினேஷ் இருந்ததன் பலனும் அவருக்கு தேர்தலில் கிடைக்கலாம்.

அதேநேரத்தில் ரேபரேலியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு முன்னாள் முதல்வர் மாயாவதி தனது பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) சார்பில் வேட்பாளரை நிறுத்தியுள்ளார். ரேபரேலி வாக்காளர்களில் சுமார் 34 சதவீதம் பேர் தலித்துகள். தலித் ஆதரவு கட்சியான பிஎஸ்பி, தாகூர் பிரசாத் யாதவ் என்பவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இவர் ராகுலிடம் இருந்து யாதவர் மற்றும் தலித் வாக்குகளை பிரிக்க வாய்ப்புள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலில் உ.பி.யில் சமாஜ்வாதியுடன் பி.எஸ்.பி கூட்டணி அமைத்து போட்டியிட்டது. கடந்தமுறை இக்கூட்டணி ரேபரேலியில் வேட்பாளரை நிறுத்தவில்லை. இதனால், தலித் வாக்காளர்களில் பெரும்பாலானோர் சோனியாவுக்கு வாக்களித்தனர். தற்போது ரேபரேலியில் உள்ள 6 சதவீத முஸ்லிம்கள் மட்டுமே காங்கிரஸுக்கு வாக்களிக்கும் சூழல் நிலவுகிறது.

அதேவேளை 2022 சட்டப்பேரவை தேர்தலில் ரேபரேலியின் 5 தொகுதிகளில் 4-ல் சமாஜ்வாதி வெற்றி பெற்றது. ஒன்றை மட்டுமே பாஜக கைப்பற்றியது. இங்கு காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. சமாஜ்வாதி எம்எல்ஏ மனோஜ் பாண்டேவும் பாஜகவில் இணைந்துள்ளார்

காங்கிரஸுக்கு ரேபரேலியில் கிடைத்த வாக்கு சதவீதங்களும் குறைந்து வருகின்றன. 2009-ல் 72.2%, 2014-ல் 63.8% வாக்குகள் கிடைத்தன. 2019-ல் பாஜகவின் தினேஷ் சோனியாவுக்கு சவாலாக விளங்கினார். இவரால் காங்கிரஸின் வாக்கு சதவிகிதம் 55.8 என்றானது. பாஜகவுக்கு 2014-ல்21.1% வாக்குகள் கிடைத்தது. இது 2019-ல் 38.7% ஆக உயர்ந்துள்ளது.

இத்தனை காரணிகளுக்குப் பிறகும் ராகுலை பாஜக வீழ்த்துவது கடினம் என்றே கருதப்படுகிறது. ஏனெனில் ரேபரேலியின் முதல் மக்களவைத் தேர்தலில் பெரோஸ் காந்தி போட்டியிட்டது முதல் நேரு-காந்தி குடும்பத்துடன் அதன் வாக்காளர்கள் உணர்வுபூர்வமாக இணைந்துள்ளனர். எனவே கடுமையான போட்டி இருக்கும் என்றாலும் ராகுலுக்கு வெற்றி பெறவே வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.