ரயில் நிலையங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் பிளாட்பார்ம் டிக்கெட் விலை 10 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
கொரானா வைரஸ் எதிரொலி! பிளாட்பார்ம் டிக்கெட் விலை 50 ரூபாய் ஆக உயர்வு! தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு!
உலகமெங்கும் உள்ள பல நாடுகளில் வேகமாக பரவி வரும் கொரானா வைரஸ் இந்தியாவிலும் பரவிவருகிறது. இந்தியாவில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கொரானா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பரவி வரும் கொரானா வைரஸை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அதில் ஒரு பகுதியாக மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க கல்வி நிறுவனங்களுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வணிக வளாகங்கள் ,ஷாப்பிங் மால், திரையரங்குகள் போன்ற இடங்களை மூட வேண்டியும் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேபோல மக்கள் ரயில் நிலையங்களில் கூடுவதை தவிர்க்கும் வகையில் பிளாட்பார்ம் டிக்கெட்டுகளின் விலையை 10 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த விலை உயர்வு மார்ச் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.