’கவர்’ வாங்குவதில் சைதை துரைசாமி புதிய டெக்னிக்

இந்த நேரத்தில் புகார் மனு வாங்குவதில் சைதை துரைசாமி ஒரு புதிய நடைமுறையைக் கையாண்டார். அதாவது கவருக்குள் வைத்து கொடுக்கும் புகார் மனுக்களை அவர் வாங்க மாட்டார். கவரில் இருந்து பிரித்து தனியே கொடுக்கும் புகார் மனுக்களை மட்டுமே வாங்குவார்.


என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 12

மாநகராட்சியில் கொடுக்கப்படும் புகார் மனுக்கள் பதிவு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற தகவல் சென்னை முழுக்க பரவியதும், தினமும் மக்கள் மனு கொடுக்க வந்தார்கள். நிறைய பேர் மேயர் சைதை துரைசாமியிடம் மட்டுமே கொடுப்பேன் என்று பிடிவாதமாக நின்று அவரை சந்தித்துக் கொடுத்தார்கள்.

மாதம் ஒரு நாள் மட்டுமே புகார் மனுக்கள் வாங்கும் நடைமுறை சென்னை மாநகராட்சியில் இருந்ததை மாற்றி தினமும் மனு வாங்கும் புதிய நடைமுறையைக் கொண்டுவந்தார். அதன்படி வீட்டில் இருந்து கிளம்பும் நேரத்தில், ஆய்வு செய்யும் நேரத்தில், மாநகராட்சி அலுவலகத்தில் என எல்லா இடங்களிலும் பொதுமக்களின் புகார் மனுக்களை சைதை துரைசாமி பெறத் தொடங்கினார்.

இந்த நேரத்தில் புகார் மனு வாங்குவதில் சைதை துரைசாமி ஒரு புதிய நடைமுறையைக் கையாண்டார். அதாவது கவருக்குள் வைத்து கொடுக்கும் புகார் மனுக்களை அவர் வாங்க மாட்டார். கவரில் இருந்து பிரித்து தனியே கொடுக்கும் புகார் மனுக்களை மட்டுமே வாங்குவார்.

யார், என்ன மனு கொண்டுவந்தாலும், கவரில் இருந்து வெளியே எடுத்து, கடிதத்தை மட்டுமே கொடுக்கச் சொல்வார். யாராவது கவரோடு ஒட்டிய மனுவை கொடுத்துவிட்டுப் போய்விட்டார்கள் என்றாலும், தபால் மூலம் மனு வருகிறது என்றாலும் அவற்றை அப்படியே உதவியாளரிடம் கொடுத்துவிடுவார். உதவியாளர்கள் அந்த கவரை கிழித்து அதிலிருந்து எடுத்துக் கொடுக்கும் கடிதத்தை மட்டும் வாங்கிப் படிப்பார்.

இதற்கான காரணத்தை அதிகாரி ஒருவர் சைதை துரைசாமியின் உதவியாளரிடம் கேட்டார். அதற்கு அந்த உதவியாளர், ‘ஒரு சிலர் மனு தரும் கவருக்குள் பணம் வைத்துத் தருவது உண்டு. அப்படி பணமும் தன் கைக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே இப்படி ஒரு பழக்கம் வைத்திருக்கிறார். மேலும், மொட்டைக் கடுதாசி எழுதுபவர்களையும் இதன் மூலம் கட்டுப்படுத்திவிடலாம். கையில் மனு வாங்குவதால் யாரும் மொட்டைக் கடிதம் கொடுப்பதில்லை’ என்று விளக்கினார்.

புகார் மனு விவகாரத்தில் இன்னொரு சீர்திருத்தமும் கொண்டுவந்தார் சைதை துரைசாமி.

- நாளை பார்க்கலாம்.