கோடை விடுமுறையில் ஒவ்வொரு தலைவர்களும் குளுகுளு பிரதேசத்துக்கு ஓடிப் போய் ஒதுங்குவார்கள். ஜெயலலிதாவுக்கு கொடநாடு என்றால் ஸ்டாலினுக்கு கொடைக்கானல். இதற்குப் பின்னே இருக்கிறதாம் ஒரு சென்டிமென்ட் விவகாரம்
ஜெயலலிதாவுக்கு கொடநாடு… ஸ்டாலினுக்கு கொடைக்கானல்
ஓய்வு எடுப்பதற்காக ஸ்டாலின் மாலத்தீவுக்குப் போகிறார் என்று ஒரு செய்தி வெள்8யானது. பிரதமர் மோடி மீது கடும் விமர்சனம் வைத்திருக்கும் மாலத்தீவுக்கு ஸ்டாலின் போகக்கூடாது என்று எதிர்விமர்சனம் வைத்தார்கள்.
இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 5 நாட்கள் குடும்பத்தினருடன் தங்கி ஓய்வெடுக்க முதல்வர் திட்டமிட்டிருப்பது உறுதியாகியுள்ளது. இதற்காக திங்களன்று சென்னையில் இருந்து தனி விமானத்தில் குடும்பத்தினருடன் மதுரை வருகிறார். அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் வருகிறார். அங்கு தனியார் ஹோட்டலில் குடும்பத்தினருடன் மே 3-ம் தேதி வரை 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கிறார்.
கடந்த 2021-ல் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்ததும் குடும்பத்துடன் வந்து தங்கி ஓய்வெடுத்தது குறிப்பிடத்தக்கது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் ஓய்வெடுக்க வருகிறார். ஓய்வுக்காக வருவதால், கட்சியினர் யாரும் முதல்வரை சந்திக்க அனுமதி இல்லை. மே 3 அல்லது மே 4-ம் தேதி மீண்டும் சென்னை திரும்புவார் என்று திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஸ்டாலின் கொடைக்கானல் செல்வதற்கு சென்டிமென்ட் காரணம் என்கிறார்கள். அதாவது கடந்த சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக்குப் பிறகு கொடைக்கானலில் ஓய்வு எடுத்து திரும்பினார். வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தார். அதேபோன்று இந்த முறையும் வெற்றியை எதிர்பார்த்தே கொடைக்கானலுக்குப் போயிருக்கிறாராம். ஜெயலலிதாவுக்கு கொடநாடு என்றால் ஸ்டாலினுக்கு கொடைக்கானல் சென்டிமென்ட் என்கிறார்கள்.