வெற்றியைத் தடுக்க உதயநிதியே போதும்…. கடும் அதிருப்தியில் தி.மு.க. முக்கியப் புள்ளிகள்.

தி.மு.க.வில் அப்பா, மகன், பேரன் என்று எல்லோருக்கும் சலாம் போடவேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்த சமாச்சாரம்தான். ஆனால், தேர்தல் நெருக்கத்தில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்டுவரும் அதிகளவான முக்கியத்துவம், அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


உதயநிதி திடுதிப்பென இளைஞரணி செயலாளர் பொறுப்பில் அமர வைக்கப்பட்டதை தி.மு.க.வினர் எதிர்க்கவில்லை என்றாலும், மாவட்ட அரசியலில் தலையிடாமல் இருந்தால் போதும் என்று அமைதியாக இருந்தனர். மேலும், பிரசாரத்துக்கு மட்டுமே வருவார், கட்சி அரசியலில் கவனம் செலுத்தமாட்டார் என்ற நம்பிக்கையில் இருந்தனர்

ஆனால், உதயநிதியை பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்க கட்சி மேலிடம் முடிவு செய்திருக்கும் தகவல்தான் மாவட்டச் செயலாளர்களையும் மற்றும் மூத்த நிர்வாகிகளையும் கொந்தளிக்க வைத்திருக்கிறது. முதல் கட்டமாக, உதயநிதியை கூப்பிட்டு நிகழ்ச்சிகளை நடத்துமாறு எல்லா மாவட்ட செயலாளர்களுக்கும் தலைமையிலிருந்து உத்தரவு போக, நிர்வாகிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். 

தீபாவளியை முன்னிட்டு அ.தி.மு.க.வில் இருந்து அனைத்து நிர்வாகிகளுக்கும் பெரும் தொகை சென்றிருக்கும் நிலையில், உதயநிதியைக் கூப்பிட்டு ஏகமாய் செலவழித்து பிரமாண்டமா நிகழ்ச்சி நடத்தச்சொல்வதைக் கண்டு அதிர்ந்து நிற்கிறார்கள்.

இப்போதைக்கு எங்கள் ஊரில் வேண்டாம் என்று ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களும் நிகழ்ச்சியை தள்ளிப் போடுகிறார்கள். இது, எங்கே போய் முடியப்போகிறதோ, உதயநிதி ஒருத்தர் மட்டுமே கட்சியை தேர்தலில் காலி செய்யப் போதும் என்கிறார்கள், மூத்த நிர்வாகிகள்.

தலைமையின் காதுக்கு இந்த குரல் எட்டுமா?