எம்.பி., தேர்தலில் விஜயகாந்த் – தினகரன் கூட்டணி! பேச்சுவார்த்தை துவங்கியது!

நாடாளுமன்ற தேர்தலில் விஜயகாந்த் – தினகரன் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.


நாடாளுமன்ற தேர்தல் இன்னும் நாற்பது நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. ஏழு அல்லது ஐந்து கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும். அந்த அடிப்படையில் ஏப்ரல் மாதம் தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

   இதனை கருத்தில் கொண்டு கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அரசியல் கட்சிகள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. தி.மு.க., அ.தி.மு.க சார்பில் பேச்சுவார்த்தை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களை தான் கூட்டணிக்காக காத்திருக்கும் கட்சிகள் அணுகி வருகின்றன.

 

   இதே பாணியில் தே.மு.தி.க சார்பில் அக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையில் கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டுள்ளது. தி.மு.க – அ.தி.மு.கவுற்கு மாற்றாக கூட்டணி அமைக்க வேண்டும் என்பது தான் விஜயகாந்தின் விருப்பமாகும். அந்த வகையில் அக்கட்சிகளுக்கு மாற்றான கூட்டணியில் தினகரனை கொண்டு வர வேண்டும் என்று சுதீஷ் விரும்புகிறார்.

 

   எனவே சுதீஷ் தரப்பில் இருந்து தினகரன் தரப்புக்கு கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தூது அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை ஏற்று சுதீசுடன் தினகரன் தரப்பில் இருந்து பேசப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதாவது தே.மு.தி.க – அ.ம.மு.க இடையே கூட்டணிக்கான பூர்வாங்க பேச்சு தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

 

   அதாவது சுதீசுக்கு நெருக்கமான ஒருவரும் – தினகரனுக்கு நெருக்கமான ஒருவரும் கூட்டணி தொடர்பான பேச்சை ஆரம்பித்துள்ளதாகவும் விரைவில் சுதீஷ் – தினகரன் போனில் பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த பேச்சில் முன்னேற்றம் ஏற்படும் பட்சத்தில் சுதீஷ் தலைமையிலான குழு தினகரனை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

   இந்த சந்திப்பு இரண்டு கட்சிகளுக்கும் பொதுவான ஒரு இடத்தில் நடைபெறும் என்றும் சொல்லப்படுகிறது. தினகரன் மற்றும் தே.மு.தி.கவை பொறுத்தவரை அ.தி.மு.க மற்றும் தி.மு.க தான் எதிரிகட்சிகள். இந்த முழக்கத்தை முன்வைத்து தினகரன் கட்சியுடன் கூட்டணி சேரலாம் என்பது தான் சுதீசின் நிலைப்பாடாக உள்ளது.

 

   இந்த நிலையில் சென்னையில் எழும்பூரில் தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தேசிய கட்சிகளுடன் தங்கள் கட்சி கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என்று அவர் கூறினார். அதே சமயம் மாநில கட்சிகளுடன் தாங்கள் பேசி வருவதாகவும் தினகரன் தெரிவித்தார். அதாவது தே.மு.தி.கவுடனான பேச்சை தான் தினகரன் இப்படி கூறியதாக சொல்லப்படுகிறது.

 

   கூட்டணி தொடர்பாக தினகரன் தரப்பில் கேட்கப்பட்ட போது தே.மு.தி.க அந்த கட்சியின் தற்போதைய நிலையை மனதில் கொண்டு தொகுதி ஒதுக்கீட்டை பேசினால் கூட்டணிக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றே அண்ணக் கூறுவதாக சொல்கிறார்கள்.