மகளிர் டி20 உலகக் கோப்பையை வெல்லுமா இந்திய அணி? இறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை!

தற்போது நடந்து வரும் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.


ஆஸ்திரேலியாவில் மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தன. முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத இருந்தது. ஆனால் மழை காரணமாக இந்த போட்டி ஒரு பந்து கூட வீசாமல் கைவிடப்பட்டது.  

இதனால் புள்ளி பட்டியலில் இங்கிலாந்து அணியை விட இந்தியா முன்னிலையில் இருந்ததால் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது. அதேபோல ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதி போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட்டது. எனினும் ஓவர்கள் குறைக்கப்பட்டு நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

இதனால் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள டி20 மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. இரு அணிகளுமே திறமையாக விளையாடி வருவதால் யார் கோப்பையை வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.