திருவள்ளூர் அருகே 5 மாதங்களுக்கு முன் மாயமான பள்ளி மாணவி தற்போது எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
6 மாதங்களுக்கு முன்பு மாயமான சிறுமி! எலும்புக் கூடாக கண்டுபிடிப்பு!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே புது வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மாயமானார். பள்ளி சென்ற அவர் மாலையில் வீடு திரும்பாததையடுத்து பதறிப்போன பெற்றோர் பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் சிறுமியை பல இடங்களில் தேடினர். உற்றார் உறவினர்களும் ஒருபுறம் சிறுமியை தீவிரமாக தேடிவந்தனர். ஆனால் எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால் அவர்கள் நம்பிக்கை இழந்தனர்.
காவல்துறையினரும் ஒரு கட்டத்துக்கு மேல் சிறுமியை தேடும் பணியை நிறுத்தி வைத்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அருகே உள்ள கீச்சலம் என்ற கிராமத்தில் கரும்பு தோட்டத்துக்கு சென்ற விவசாயி ஒருவர், புதைக்கப்பட்டு சற்று வெளியே தெரிந்த எலும்பு கூடை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பதறிப்போன அவர் பொதட்டூர்பேட்டை காவல்நிலையத்திற்கு உடனடியாக தகவல் கொடுத்தார். விரைந்து சென்ற போலீசார் அந்த எலும்புக்கூட்டை வெளியே எடுத்தனர். அருகிலேயே புத்தகப்பை, பேனா உள்ளிட்ட பொருட்கள் சிதறிக்கிடந்தன.
மாயமானவர்கள் பட்டியலை தேடியபோது முதலில் புலப்பட்டது புது வெங்கடாபுரத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி தான். உடனடியாக அந்த சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்ற பெற்றோர் எலும்புக்கூடு தங்களது பிள்ளைதான் என்று உறுதி செய்து கதறி அழுதது காண்போரை கலங்கச் செய்தது.
இதையடுத்து அந்த எலும்பு கூடானது மரபணு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தச் சிறுமி எப்படி கொல்லப்பட்டார் என்பது மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தெரியவரும்.