காப்பான் பிரஸ் மீட்! கையெடுத்து கும்பிட்டு ரசிகர்களிடம் கெஞ்சிய நடிகர் சூர்யா! நெகிழ வைத்த சம்பவம்!

காப்பான் படத்தின் பிரஸ் மீட்டின் போது நடிகர் சூர்யா தன்னுடைய ரசிகர்களுக்க மிகுந்த உருக்கத்துடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சூர்யாவின் காப்பான் திரைப்படம் வரும் 20ந் தேதி வெளியாக உள்ளது. அயன், மாற்றான் படங்களை தொடர்ந்து சூர்யா – கேவி ஆனந்த் இணைந்துள்ளனர். அயன் பெரிய வெற்றி பெற்றது. ஆனால் மாற்றான் தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் மீண்டும் கேவி ஆனந்த்துடன் சூர்யா இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. படத்தில் மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன் லால், நடிகர் ஆர்யா, அவரது மனைவி சயிசா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய சூர்யா, கட்அவுட் பேனர் வைத்து தான் என்னை ரசிகர்கள் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பதில்லை. கட்அவுட் பேனர் வைக்கும் காசுக்கு ஏழைகளுக்கு உதவலாம். இல்லாதவர்களுக்கு நல்லது செய்யலாம்.

ஒரு பேனரால் ஒரு இளம் பெண் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையை அளிக்கிறது. என்னால் அதனை ஜீரனித்துக் கொள்ளவே முடியவில்லை. எனவே இரு கைகளை கூப்பி உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன் தயவு செய்து என்னுடைய படத்திற்கு இனி பேனர் வைக்காதீர்கள்.

இப்பாறு சூர்யா மிகுந்த உருக்கத்துடன் பேசினார். பேனர் வைக்க வேண்டாம் என்று வெறும் கோரிக்கையோ தடையோ விதிக்காமல் நேரடியாக ரசிகர்களிடம் சூர்யா கெஞ்சியது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.