அந்த நேரத்தில் இக்கட்டான சூழலில் சிக்கும் பெண்கள்! உதவிக்கரம் நீட்டும் ஏர்டெல்!

டெல்லி: பெண்களின் பாதுகாப்புக்காக, ஏர்டெல் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.


நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், பெண்களை பாதுகாக்க வேண்டி ஏர்டெல் நிறுவனம், மை சர்க்கிள் என்ற புதிய மொபைல் அப்ளிகேஷன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஏர்டெல் நிறுவனமும், எஃப்.ஐ.சி.சி.ஐ மகளிர் அமைப்பும் இணைந்து இப்புதிய அப்ளிகேஷனை வடிவமைத்து, வெளியிட்டுள்ளன. 

மை சர்க்கிள் என்ற இந்த அப்ளிகேஷனை, ஏர்டெல் வாடிக்கையாளர்களாக இல்லாதவர்கள் கூட பயன்படுத்தலாம்.  தங்களுக்கு ஏதேனும் இக்கட்டான சூழல் ஏற்பட்டால், அப்போது, தனக்கு தெரிந்த 5 பேரிடம் அவசர உதவி கேட்டு, பெண்கள் இந்த அப்ளிகேஷன் மூலமாக மெசேஜ் அனுப்ப முடியும். இந்த மெசேஜை, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் அனுப்பலாம் என, ஏர்டெல் கூறியுள்ளது. 

தங்களுக்கு வேண்டிய 5 பேரின் செல்ஃபோன் எண்களை இந்த அப்ளிகேஷனில் பதிந்து வைத்தால், அவசர நேரத்தில் அவர்களுக்கு இதுபற்றிய தகவல் உடனே தெரிவிக்கப்படும். அத்துடன், குறிப்பிட்ட பெண் எங்கே உள்ளார் என்பது பற்றிய வரைபட தகவலும் அவருக்கு வேண்டியவர்களுக்குச் சென்றடையும். இதன்மூலமாக, பெண்களை உடனே காப்பாற்ற முடியும் என, ஏர்டெல் குறிப்பிட்டுள்ளது.