இந்திய அரசியலின் அடிப்படையாக இருக்க கூடிய முஸ்லீம் மத வெறுப்பு, தலித்தியம், ஊடக நெறி போன்றவற்றை முக்கிய களமாக கொண்டு வெளியாகியுள்ள அமேசன் பிரைம் வீடியோவின் ஒரிஜினில் சீரிஸ் பாதாள் லோக் நாடு முழுவதும் விவாதத்தை கிளப்பிவிட்டுள்ளது.
முஸ்லீம் மத வெறுப்பு! தலித் அரசியல்! ஊடக நெறிபிறழ்ச்சி! பாதாள் லோக் விமர்சனம் - தமிழ்..!
பாதாள் லோக் சீரிசின் முதல் எபிசோடின் ஆரம்ப காட்சியில் இன்ஸ்பெக்டர் ஹதிராம் சவுத்ரி பேசிக் கொண்டிருப்பதுடன் துவங்கும். வாட்ஸ்ஆப்பில் தனக்கு வந்த பார்வேர்டு மெசேஜில் இருக்கும் தகவலை சப் இன்ஸ்பெக்டர் அன்சாரியிடம் கூறிக் கொண்டே வாகனத்தை ஓட்டிக் கொண்டிருப்பார் சவுத்ரி. இப்படி தொடங்கும் முதல் எபிசோடின் அடுத்த காட்சியில் சீரிஸ் வேகமெடுக்கும்.
நான்கு பேர், தாங்கள் தங்கியிருந்த ஓட்டல் அறையில் இருந்து ஒரு ஸ்கார்பியோ காரில் புறப்படுவார்கள். திடீரென அவர்களை மேலும் இரண்டு கார்கள் துரத்தும். ஸ்கார்பியோ காரில் இருந்தவர்கள் தப்பிக்க முயல்வார்கள். ஆனால் ஒரு பாலத்தில் நிகழ்ந்த விபத்தில் ஸ்கார்பியோ காரில் இருந்தவர்கள் சிக்கிக் கொள்வார்கள்.
ஸ்கார்பியோ காரை துரத்தி வந்தவர்கள் டெல்லி போலீசார் என்றும் சிக்கியிருப்பவர்கள் டெல்லியில் மிக முக்கியமான ஒரு தொலைக்காட்சியின் பிரபலத்தை கொலை செய்ய வந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகும். இப்படித் தொடங்கும் சீரிஸ் மொத்தம் 9 பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளன. ஸ்கார்பியோ காரில் வந்தவர்கள் யார்?
அவர்கள் ஏன் தொலைக்காட்சி பிரபலம் சஞ்சீவ் மெஹ்ராவை கொலை செய்த வந்தார்கள். இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன என்பதைத்தான் அடுத்தடுத்த பாதாள் லோக் எபிசோடுகளில் காட்சிகளாக விவரித்துள்ளனர். இந்தியாவில் எப்படி அரசியல் செய்யப்படுகிறது? முஸ்லீம்களை அதிகார வர்க்கம் எப்படி பயன்படுத்துகிறது?
தலித்துகளை தலித் அரசியல் தலைவர்கள் எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்கள்? 45 கொலைகளை செய்த நபர் ஒருவர் எப்படி போலீசிடம் சிக்காமல் பல ஆண்டுகளாக தப்பித்து இருக்கிறார்? என்று வட இந்திய அரசியலை மிகவும் நுட்பமாக பாதாள் லோக்கில் காட்டியிருக்கிறார்கள். அதிலும் ஊடக பிரபலம் சஞ்சீவ் மெஹ்ராவை கொலை செய்ய வந்த 4 பேரும் யார், அவர்கள் ஏன் இந்த வேலைக்கு வந்தார்கள் என்று சொல்லப்படும் பிளாஸ்பேக் நெஞ்சை உலுக்கி எடுக்கும்.
பஞ்சாப்பில் தலித் மக்கள் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களை தாக்கினால் என்ன நிகழும் என்பதை ஒரே காட்சியில் சொல்லியிருப்பார்கள். தலித் இளைஞன் ஒருவர் பிற்படுத்தப்பட்ட சமுதாய இளைஞனை தாக்கியதற்காக அந்த தலித் இளைஞனின் தாயாரை 10 பேர் சேர்ந்து புனரும் காட்சி அதிர்வலைகளை ஏற்படுத்தும்.
45 கொலைகளை செய்துள்ள ஹத்தோடா தியாகியின் பிளாஸ்பேக் காட்சி மிரள வைக்கும். வட இந்தியாவில் பெண்களை ரேப் செய்வதை மூன்று வகைப்படுத்தி அதனை ஒரு செயல்முறையாக வைத்திருக்கிறார்கள் என்பதை ஒரு காட்சி விவரிக்கும் போது நமக்கு ஏற்படும் அதிர்ச்சியை தவிர்க்க முடியாது.
கார் திருடனான கபீரை சிபிஐ பாகிஸ்தானின் லஷ்கரே தொய்பா தீவிரவாதியாக்குவது, வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த சின்னியை நேபாளத்தின் ஐஎஸ்ஐ ஏஜென்டாக்குவது என இந்திய அரசியல் செயல்படும் விதம் நமக்கு எல்லாம் திகைப்பை ஏற்படுத்தாமல் இருக்காது. சப் இன்ஸ்பெக்டராக இருக்கும் அன்சாரிக்கு அவர் வேலை பார்க்கும் இடத்தில் அவருக்கு கீழ் பணியாற்றும் காவலர்களால் ஏற்படும் சங்கடங்கள்.
ரயிலில் சிக்கன் பீஸ் சாப்பிடும் இஸ்லாமிய குடும்பத்தை காவி உடையில் இருப்பவர்கள் மாட்டிறைச்சி என்று கூறி அடித்துக் கொல்லும் காட்சி என தற்போதைய புதிய இந்தியாவின் அக்கிரமங்களை போகிற போக்கில் கூறாமல் அதன் பின்னணியில் ஒரு வலுவான கதைக்களத்தை வைத்து பாதாள் லோக்கை உயர்ந்து நிற்க வைத்திருக்கிறார்கள்.
தொலைக்காட்சி பிரபலம் சஞ்சீவ் மெஹ்ராவை ஹீரோ போல் காட்டி அவர் ஒரு லிபரல், லெப்டிஸ்ட் சிந்தனை கொண்டவர் என தெரியப்படுத்தி ஆனால் அவர்களின் நோக்கமும் ஒன்று தான் இடதுசாரிகள் ஒன்றும் யோக்கியர்கள் இல்லை என்பதை நெற்றிப்பொட்டில் அடித்தது போல் சொல்லியிருப்பார்கள். இதே போல் சீரிசின் நாயகன் என்றால் அது இன்ஸ்பெக்டர் சவுத்ரி தான். தனது இயலாமையை வென்று மர்ம முடிச்சுகளை அவிழ்க்க அவர் நடத்தும் போராட்டும் எ மாஸ்டர் கிளாஸ்.
இந்தியாவில் ஊடகங்கள் எப்படி செயல்படுகின்றன? அவற்றை கட்டுப்படுத்துவது யார்? ஊடகங்களின் நோக்கம் என்ன? அதில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் எந்த மாதிரியான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்று பிரித்து மேய்ந்து வைத்திருக்கிறார்கள்.
9 எபிசோடுகளும் சுவாரஸ்யமாக இருப்பதுடன், விறுவிறுப்புக்கும் குறைவு இருக்காது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள பாதாள் லோக்கில் நடித்துள்ள அனைவரின் நடிப்பும் நம்மை பாதாள் லோக்கிற்குள் அழைத்துச் சென்றுவிடும். அடுத்த பாகம் எப்போது வரும் என்கிற எதிர்பார்ப்புடன் முடித்திருப்பார்கள்.