காவிரி நீருக்கு பொங்கும் அண்ணாமலை

தமிழிசைக்கு என்ன பதில்?


ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையில் தமிழிசை சவுந்தரராஜனை அமித் ஷா கண்டிப்பதுபோல வெளியாகியுள்ள வீடியோ குறித்து இதுவரை எந்த கருத்தும் சொல்லாத அண்ணாமலை திடீரென காவிரி நீருக்கு போர்க் குரல் எழுப்பியிருக்கிறார்.

இது குறித்து அவர், ‘’காவிரி நீரில், கடந்த ஆண்டு கிடைக்கப் பெற்ற தண்ணீரின் அளவு 81.4 டிஎம்சி மட்டுமே. ஆண்டிற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் பெற்றிருக்க வேண்டிய தமிழகம், அதில் பாதி அளவைக் கூட பெறவில்லை என்பது, திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் காட்டுகிறது. திமுக காங்கிரஸ் சந்தர்ப்பவாத இந்தி கூட்டணியின் நலனுக்காக, தமிழக விவசாயிகளின் நலனை மொத்தமாக அடகு வைத்திருக்கிறார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.

காவிரியில் குறித்த அளவு நீர்வரத்து இல்லாததால், இந்த ஆண்டு ஜூன் 12 அன்று, விவசாயத்திற்காகத் திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை திறக்கப்படாமல், பாசனத்துக்கு நீர் இன்றி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இது குறித்த எந்தக் கவலையும் இல்லை. தன்னை ஒரு டெல்டாக்காரன் என்று கூறிவிட்டு, வயலில் கான்கிரீட் சாலை அமைத்து நடக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, விவசாயிகள் வேதனை எப்படிப் புரியும்?

முதலமைச்சர் ஸ்டாலின், தனது கூட்டணி நலனுக்காக, தமிழக விவசாயிகள் நலனைப் புறக்கணிப்பதை நிறுத்திக் கொண்டு, உடனடியாக, காவிரி நீரில் தமிழகத்தின் பங்கைப் பெற்றுத் தரும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்’’ என்று கேட்டிருக்கிறார்.

இதற்கு பதில் அளிக்கும் தி.மு.க.வினர், ‘’’காவேரி நீர் மேலாண்மை மத்திய அரசிடம் உள்ளது! கர்நாடகா தராத போது மாநில அரசிடமிருந்து பெற்று தர வேண்டிய கடமை மத்திய அரசு உடையது அல்லவா? மேலும் கர்நாடகாவைச் சேர்ந்தவரே நீர் மேலாண்மை துறை சம்பந்தப்பட்ட அமைச்சரவை பாஜக ஏன் தந்தது? தமிழிசையை அவமானப்படுத்திய அமித் ஷாவை அண்ணாமலை கண்டிப்பாரா?’’ என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி எழுப்புகிறார்கள்.