தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பறவைகள் தாகம் தீர்ப்பதற்காக குளம் வெட்டப்பட்டு இருப்பது இயற்கை நேசர்களை மனம் மகிழ செய்துள்ளது.
2400 சதுர அடி பரப்பு! 3 அடி ஆழம்! பறவைகள் தாகம் தீர்க்க பிரத்யேக குளம்! நெகிழ்ச்சி சம்பவம்!
தஞ்சாவூரில் இருக்கும் தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருப்பவர் பாலசுப்பிரமணியன். காலை மற்றும் மாலை வேளைகளில் இவர் பல்கலைக்கழக நடைமேடையில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். அப்போது ஒரு சில காட்சிகள் இவரது மனதை உருகச் செய்தது. பறவைகளும் விலங்குகளும் தண்ணீரின்றி தவிப்பதைக் கண்டு இவர் வேதனை அடைந்தார். சற்றும் யோசிக்காத பாலசுப்பிரமணியன் பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான இடத்தில், 2400 சதுர அடி பரப்பளவில் 3 அடி ஆழம் உள்ள குளத்தை உடனடியாக வெட்டச் செய்தார்.
செம்மண் பூமி என்பதால் நீர் வேகமாக உறிஞ்சப்படுவதை தடுக்க களிமண் கொட்டப்பட்டது. பல்கலைக்கழக பயன்பாட்டுக்கான தண்ணீரில் ஒரு பகுதி அந்த குளத்திற்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டது. தற்போது அந்த குளத்தில் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு தேவையான தண்ணீர் அன்றாடம் விநியோகிக்கப்பட்டு வருவதால், வெயில் காலத்தில் அவைகள் தாகம் தீர்த்து கீச்சொலியால் நன்றி கூறிச் செல்கின்றன.
சோலைவனமாக காட்சியளிக்கும் அந்தப் பல்கலைக்கழகத்தில் தற்போது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள், முயல் , குள்ளநரி, ஆமை, மான் போன்ற விலங்கினங்கள் உள்ளன. நிலத்தடி நீர் மட்டம் பற்றி என்பது அடிக்கு மேல் சென்று விட்ட காரணம் தான் பறவைகள் மற்றும் விலங்குகளை பரிதவிக்க செய்துள்ளதாக துணைவேந்தர் பாலசுப்பிர மணியன் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் பறவைகள் ஒன்று கூடி அமர்ந்து சத்தமிட்டுக் கொண்டே பறக்கும் அந்த அற்புத காட்சியும் ஒலியும் நம்மையும் அறியாமல் மனதில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓட செய்யும் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.