மருத்துவப்படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் பா.ம.க. குறுக்குச்சால் ஓட்டுவது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இட ஒதுக்கீட்டில் குறுக்குசால் ஓட்டுகிறார் ராமதாஸ்…! கம்யூனிஸ்ட் குற்றசாட்டு
மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதமான இடங்களை ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளும், தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. உச்சநீதிமன்றம் இந்த வழக்கினை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதன்படி தமிழக அரசும் பிரதான அரசியல் கட்சிகளின் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
அகிலஇந்திய தொகுப்பு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதமான இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழக அரசும் 1994-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு இடஒதுக்கீடு சட்டத்தின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பின்தங்கிய மக்களுக்கு 50 சதமானம், பட்டியல் இன மக்களுக்கு 18 சதமானம், பழங்குடி இனமக்களுக்கு 1 சதமானம் ஆக மொத்தம் 69 சதமான இடஒதுக்கீட்டினை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற வழக்கில் கோரப்பட்டுள்ளது.
அனைத்துக்கட்சிகளும் தமிழக அரசும் ஒத்தக் கருத்தோடு இந்த கோரிக்கையை முன் வைத்துள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி மட்டும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசின் இடஒதுக்கீட்டின்படி 27 சதமானம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கையின்படி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டில் 23 சதமான இடங்களை விட்டுக்கொடுப்பதாக அமைந்துள்ளது. இது தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமையை சீர்குலைப்பதாக உள்ளது.
மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்கையில் இடஒதுக்கீடு குறித்து அகில இந்திய மருத்துவ கவுன்சில் வகுத்துள்ள விதியின் படி அந்தந்த மாநிலங்களில் அமலில் இருக்கும் இடஒதுக்கீடு கொள்கையினை செயல்படுத்த வேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இடஒதுக்கீடு சட்டபடி பிற்பட்டோருக்கான 50 சதமான இடங்களை வழங்காமல் கடந்த பல ஆண்டுகளாக மத்திய அரசு ஏமாற்றி வருகிறது. மத்திய அரசின் சமூகநீதிக்கு எதிரான போக்கைக் கண்டித்து தமிழகத்தின் அனைத்துக்கட்சிகளும் ஓரணியில் திரண்டு குரல்கொடுக்க முன்வந்திருப்பது பாரட்டத்தகுந்தது. ஆனால், சமூகநீதி பேசும் பாட்டாளி மக்கள் கட்சி பிற்படுத்தபட்ட மக்களின் உரிமையை விட்டுக்கொடுக்கும் வகையில் நீதி மன்றத்தில் வாதாடுவது வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைக்கும் செயலாகும். பாமக தன்னுடைய நிலையை மாற்றிக்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.