கோடை ஜாலிக்கு ஊட்டிக்குப் போறீங்களா… இ-பாஸ் வாங்குங்க பாஸ்

மக்கள் கூட்டத்தையும் போக்குவரத்து நெரிசலையும் சமாளிக்கும் வகையில், ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7ம் தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கோடையில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்துவருகிறது. இந்த நிலையில் மலைபிரதேசங்களில் கூட்டம் எக்கச்சக்கமாக அதிகரித்துவருகிறது. மக்கள் கூட்டத்தையும் போக்குவரத்து நெரிசலையும் சமாளிக்கும் வகையில், ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7ம் தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்கள் காணொலி மூலம் ஆஜராகியிருந்தனர். அப்போது, அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐ.ஐ.டி. மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

ஊட்டிக்கு தினமும், 1,300 வேன்கள் உள்பட 20 ஆயிரம் வாகனங்கள் வருகின்றன என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், ‘இத்தனை வாகனங்கள் சென்றால் நிலைமை மோசமாகும். உள்ளூர் மக்கள் நடமாட இயலாது. சுற்றுச்சூழலும், விலங்குகளும் பாதிக்கப்படும். ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம். ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் வரை இடைக்கால நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கொரோனா காலத்தில் பின்பற்றப்பட்ட இ-பாஸ் நடைமுறையை ஊட்டி, கொடைக்கானலில் மே 7ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை அமல்படுத்த வேண்டும்.

இந்த இ-பாஸ் வழங்குவதற்கு முன்பு வாகனங்களில் வருவோரிடம், என்ன மாதிரியான வாகனம், எத்தனை பேர் வருகின்றனர், ஒரு நாள் சுற்றுலாவா அல்லது தொடர்ந்து தங்குவார்களா என்பன உள்ளிட்ட விவரங்களைப் பெற வேண்டும். இ-பாஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டும் அனுமதியளிக்க வேண்டும். உள்ளூர் மக்களுக்கு இ-பாஸில் இருந்து விலக்களிக்க வேண்டும். இ-பாஸ் வழங்குவதற்கு தேவையான தகவல் தொழில்நுட்ப உதவிகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி விசாரணையை ஜூலை 5ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.