காவிரிப் பாசனப் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி இல்லை - அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட எடப்பாடி
பா.ஜ.க. அரசை எதிர்க்கிறாரா எடப்பாடி பழனிசாமி? ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் அதிரடி அறிவிப்பு!
காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களில் ஐட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்படமாட்டாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பத்தாண்டுகளுக்கும் மேலாக சூழலியல் அமைப்புகள், தமிழ்த் தேசிய அமைப்புகள் உள்பட பலவேறு தரப்பினர் தொடர்ச்சியாகப் போராடிவரும் இக்கோரிக்கைக்கு முதலமைச்சர் திடீர் ஆதரவு அளித்திருப்பது போராட்ட அமைப்புகளுக்கு இன்ப அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. பல தரப்பினரும் இதை வரவேற்று நன்றியும் தெரிவித்துவருகின்றனர்.
சேலத்தில் இன்று அரசு விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “ விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டும், தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், கரூர், திருச்சி உள்பட்ட மாவட்டங்களின் டெல்டா பகுதிகள் ’"பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக’ மாற்றப்படும்.
காவிரி டெல்டா பகுதிகளை ’பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக’ச் செயல்படுத்த சட்ட வல்லுநர்களைக் கலந்தாலோசித்து இதற்கான ஒரு தனிச்சட்டம் இயற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களைத் தொடங்க இவ்வரசு எப்போதும் அனுமதி அளிக்காது.” என்று கூறினார்.