டெல்லி: இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார்.
இந்தியாவின் 2வது பெரும் பணக்காரர் ஆன மோடியின் நண்பர் அதானி! ஒரே வருடத்தில் கிடுகிடு வளர்ச்சி!
ஃபோர்ப்ஸ் பத்திரிகை இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 100 பணக்காரர்களின் பெயர், சொத்து விவரம் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, 2019ம் ஆண்டில் முகேஷ் அம்பானி, பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். 12 ஆண்டுகளாக, இந்தியாவின் முதல் பணக்காரர் என்ற பெருமையை முகேஷ் அம்பானி வகிப்பது இங்கே குறிப்பிட வேண்டிய விசயமாகும். 62 வயதாகும் அவரது தற்போதைய சொத்து மதிப்பு 3 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயாகும்.
இதற்கடுத்தப்படியாக, கவுதம் அதானி, முதல்முறையாக, 2வது இடம் பிடித்துள்ளதாக, ஃபோர்ப்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. அதானியின் சொத்து மதிப்பு தற்போது 15.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. அதானிக்கு இது பெரும் வளர்ச்சி காலம் என கருதப்படுகிறது.
இதற்கடுத்த இடங்களில் ஹிந்துஜா பிரதர்ஸ், பலோன்ஜி மிஸ்ட்ரி, உதய் கோடக், ஷிவ நாடார், கோத்ரெஜ் குடும்பம், லஷ்மி மிட்டல் உள்ளிட்டோர் உள்ளதாகவும் ஃபோர்ப்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. அதேசமயம், கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவின் 2வது பணக்காரர் என்ற பெருமையை வகித்து வந்த விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி இந்த முறை, கிடுகிடுவென சரிவடைந்து, 17வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதற்கு காரணம், அவர் செய்துவரும் நன்கொடைகள்தான் எனக் கூறப்படுகிறது. அசிம் பிரேம்ஜி இதுவரையிலும் மொத்தம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு நன்கொடைகள் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.