திருவண்ணாமலை மலை பகுதியில் பொதுமக்கள் வீசிச் சென்ற பிளாஸ்டிக் பொருட்களை பொறுப்புடன் சுத்தம் செய்து வந்த ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
திருவண்ணாமலையில் குப்பை பொறுக்கும் ஜெர்மன் இளைஞன்! நெகிழ்ச்சி காரணம்!
திருவண்ணாமலையில் ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக பக்தர்களால் கொண்டாடப்படும் கார்த்திகை தீபம் இந்த ஆண்டும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
சுமார் 2700 அடி மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்தை காண அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். அப்போது அவர்கள் தங்கள் கைகளில் எடுத்து வந்த பிளாஸ்டிக் பொருட்களை மலைப்பகுதியிலேயே வீசி எறிந்துவிட்டு தீப தரிசனம் முடிந்த பிறகு கிளம்பிவிட்டனர்.
திருவண்ணாமலைக்கு ஆன்மீக சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஒருவர் மலைப்பகுதியில் வீசப்பட்டு இருந்த பிளாஸ்டிக் பொருட்களை கண்டு அதிர்ச்சியடைந்து, தாமாக முன்வந்து தனி ஒருவராக அனைத்து பிளாஸ்டிக் பொருட்களையும் ஒரு வாரகாலமாக சுத்தம் செய்து வருகிறார்.
இதன் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகியது. இதைக்கண்ட பலர், "சொந்த ஊர் மக்களுக்கு இல்லாத அக்கறை.. எங்கிருந்தோ வந்த ஒருவருக்கு இருப்பதைக் கண்டு நெகிழ்ச்சியாக உள்ளது" என இவரை பாராட்டி வருகின்றனர். இனியாவது மலைப்பகுதிக்கு செல்லும் மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும் எனவும் சிலர் கமெண்ட் அடித்தனர்.